செய்திகள்

மைத்திரி – கூட்டமைப்பு தேன்னிலவும் ஜெனீவாவில் உருவாகும் நெருக்கடியும்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் வெளிவிவகார துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இறுதியாகத்தான் சந்தித்தார். அரசாங்கத் தரப்பினருடைய கருத்துக்களை அறிந்துகொண்டு வந்து கூட்டமைப்பின் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாக இருந்திருக்கலாம்.

சந்திப்பில் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, இராணுவக் குறைப்பு என வழமையான விடயங்கள் ஆராயப்பட்டிருந்தாலும் குவியப் புள்ளியாக இருந்தது ஜெனிவாதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாத விடயமல்ல. ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் கூட்டமைப்பும் செயற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

நிஷா: ஒத்திவைக்க ஆதரவு தாருங்கள்

நிஷா: ஒத்திவைக்க ஆதரவு தாருங்கள்

அரசாங்கத்தின் பங்காளிகளாகி அமைச்சரவையில் இணைந்து கொள்ள வேண்டும் என அரசாங்கம் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமையும் தெரிந்ததுதான். அரசின் உயர் குழுவான தேசிய நிறைவேற்றுப் பேரவையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். ஆக, மீள்குடியேற்றம் போன்ற விடயங்களை மூன்றாவது தரப்பின் மூலமாக சொல்லி அனுப்ப வேண்டிய தேவை ஒன்று இன்றில்லை.!

இப்போதுள்ள பிரச்சினை ஜெனீவாதான். மார்ச் மாதம் ஐ.நா. மனிய உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்படவிருக்கும் இலங்கை தொடர்பான போர்க் குற்ற அறிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஐ.நா. விசாரணைக்குழு பெருமளவு ஆதாரங்களைச் சேகரித்திருக்கின்றது. பெருமளவு சாட்சியங்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படும் அறிக்கை நிச்சயமாக இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும்.

ஏப்பரலில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜூனில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஐ.நா. அறிக்கை வெளியாகி, அது தொடர்பான அடுத்த கட்ட செயற்பாடுகளில் (அதாவது: சர்வதேச விசாரணை) ஐ.நா. இறங்கினால் மைத்திரி- ரணில் அரசு சந்திக்க வேண்டிய நெருக்கடி பலமானதாக இருக்கும். குறிப்பாக தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விமல் வீரவன்ச – பொதுபல சேனா குழுவினர் இதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது ஒன்று. தென்பகுதி வாக்கு வங்கியை இது பாதிக்கும்.

இரண்டாவது, இறுதிக் கட்டப் போர் வெறுமனே ராஜபக்ஷக்களால் நடத்தப்பட்டதல்ல. இதன் பின்னணியில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளும் சம்பந்தப்பட்டிருந்தன. இறுதி அறிக்கை வெளியாகி அதன் அடிப்படையில் சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பமானால், அது இலங்கையை மட்டும் பாதிக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசும் போது, ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை குறித்த அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவது தொடர்பாக நிஷா கேள்வி எழுப்பியிருந்தார். கூட்டமைப்பினர் இதற்கு ஒப்புதலளிக்கவில்லை. குறிப்பிட்ட தினத்தில் அந்த அறிக்கை வரவேண்டும் என்பதை அவர்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தியதாகத் தெரிகிகின்றது.

சம்பந்தன்: ஒத்திவைப்பதை அனுமதிக்க முடியாது

சம்பந்தன்: ஒத்திவைப்பதை அனுமதிக்க முடியாது

சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். சுமந்திரனும் இந்தக் கோரிக்கையுடன் ஜெனீவா சென்றுவிட்டார். மாவையரும் வவுனியாவில் ‘விடப்போவதில்லை’ என முழங்கியிருக்கின்றார். சம்பந்தனும் இது தொடர்பில் ஐ.நா.விசாரணைக்குழுவின் தலைவருக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றார்.

இதனைவிட, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் டயஸ்போராவும் அறிக்கை ஒத்திவைக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை.

ஜெனீவா அறிக்கை தாமதப்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் இலங்கை அரசாங்கமும் நிஷாவிடம் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் அதற்கான அங்கீகாரத்தை கூட்டமைப்பிடம் பெற நிஷா முற்பட்டிருக்கின்றார். ஜெனிவா விவகாரத்தை தாமதப்படுத்தினால் என்ன என்ற கேள்வியை நிஷா தமிழ்த் தரப்பிடம் எழுப்பியிருக்கின்றார்.

ஒருவகையில் பார்ர்த்தால் நிஷாவின் வருகையின் நோக்கமே இதற்காக தமிழர் தரப்பை நாடி பிடித்துப் பார்ப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

ஆணையாளர்: பிரேரணையை கொண்டுவருவதில் உறுதி

ஆணையாளர்: பிரேரணையை கொண்டுவருவதில் உறுதி

அறிக்கை உரிய வேளையில் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் ஐநா. மனித உரிமைகள் ஆணையாளர்  செய்க் அல் ஹீஸைன் உறுதியாக இருக்கின்றார். ஆனால், இந்த உறுதிப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ‘வல்லமை’ அமெரிக்காவிடம் உள்ளது. அதுதான் அமெரிக்கா இப்போது களத்தில் இறங்கியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துடனான தேன்நிலவுக்காலமாக இது இருந்தாலும், அதற்கான ஒரு அமிலப் பரீட்சையாக ‘ஜெனீவா’அமையலாம். இவ்விடயத்தில் அரசுடன் இணங்கிப்போகும் நிலையில் கூட்டமைப்பு இல்லை. ஜூனில் வரப்போகும் தேர்தல் அரசாங்கத்தை மட்டுமல்ல கூட்டமைப்பையும்தான் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.

ஜெனீவாவை ஒத்திவைப்பதற்கு தலையசைத்துவிட்டு ஜூனில் வாக்குக் கேட்டு வடக்கு கிழக்குக்கு வர முடியாது என்பது கூட்டமைப்பின் தலைவருக்குத் தெரியும். கூட்டமைப்புக்கு உள்ளேயே முறுகிக்கொண்டிருக்கும் சுரேஷ், மற்றும் அனந்தி சசிதரன் தரப்பினர் இதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது சம்பந்தனுக்கும் தெரியும் சுமந்திரனுக்கும் தெரியும். அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் களம் இறங்க திட்டமிடும் சுமந்திரன் இவ்விடயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

அதனால்தான் சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டதால் உருவான எதிர்ப்பு அலை சூடாக இருக்கும் நிலையிலேயே ஜெனீவாவில்  போய் நிற்கிறார் சுமந்திரன். போர்க் குற்ற அறிக்கை தள்ளிப்போக அனுமதிக்கப்போவதில்லை என்றும் அங்கு வைத்தும் அவர் முழங்கியிருக்கிறார்.

போரின் அழிவுகளுக்கு நீதி கிடைக்குமா?

போரின் அழிவுகளுக்கு நீதி கிடைக்குமா?

இதனைவிட மற்றொரு முக்கிய விடயம்: தம்மால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட மைத்திரி அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அல்லது தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ளது. அதற்கான காய்நகர்த்தலை இரு நாடுகளுமே இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

அமெரிக்கா ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டது. டில்லி கேட்டுக்கொண்டால் கூட்டமைப்பின் தலைவரின் பதில் என்னவாக இருக்கும் என்ற ஒரு கேள்வி பலமானதாக இருக்கின்றது!

“உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும், அதன் மூலமான பொறுப்புக் கூறல் அவசியம்” எனவும் “அதன் மூலமாகவே நியாயமான ஒரு தீர்வைக்கொண்டுவர முடியும்” எனவும் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் சம்பந்தனின் இராஜதந்தரத்துக்கும் ஜெனீவா ஒரு சவாலாகத்தான் வந்திருக்கின்றது.

– யாதவன்.