செய்திகள்

மைத்திரி மஹிந்த இரகசிய சந்திப்பு நடந்தது உண்மை : அனுரகுமார

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முதல் நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையே இரகிய சந்திப்பு நடைபெற்றது உண்மையே என ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலபே பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முதல் நாள் மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் இடையே சந்திப்பு நடந்தது என்பது உண்மையே இருவரும் சந்தித்துவிட்டு அப்படி சந்திக்கவில்லையென மறுத்துள்ளனர்.ஆம் அந்த சந்திப்பு சபாநாயகர் வீட்டில் நடந்தது என்பது பொய்தான் ஆனால் அது ஜனாதிபதியின் வீட்டிலேயே நடந்தது. இதன்படி சபாநாயகர் இல்லத்தில் சந்திப்பு நடந்தது என்ற செய்திகளுக்குதான் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி  8ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து வெளியேற்றவே மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளர். தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கைது செய்வதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது. என தெரிவித்துள்ளார்.