செய்திகள்

மைத்திரி , மஹிந்த சந்திப்பு விசேடமானதல்ல : ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விடயங்கள் தவிர வேறு எந்த விடயங்களும் கலந்துரையாடப்படாது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க யாரேனும் சந்தர்ப்பம் கேட்டால் அதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவது வழமையானது எனவும் இதன்படி இந்த சந்திப்பில் எவ்வித விசேட தன்மையும் கிடையாது எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த சந்திப்பின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படாது என்பதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக விடயங்கள் கலந்துரையாடப்படும்.
ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை  சந்திப்பதற்கு யாரேனும் சந்தர்ப்பம் கேட்டால் அதற்கு சந்தர்ப்பம் வழங்குவது வழமையான விடயமே. இவ்வாறிருக்கையில் இந்த சந்திப்பு தொடர்பாக ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களை ஜனாதிபதி முற்றாக நிராகரித்துள்ளார்.
இதேவேளை குறித்த சந்திப்பில் விசேட தன்மையொன்றும் கிடையாது என்பதுடன் கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 63 இலட்ச மக்களின் நம்பிக்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனாதிபதி இந்த கலந்துரையாடலை முன்னெடுத்து செல்வார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.