செய்திகள்

மைத்திரி , ரணில் ஆட்சியில் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவில்லையாம் : ஐ.தே.க கூறுகின்றது

தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவில்லையெனவும் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தினாலே இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கம் மீதான மஹிந்தவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் காஸிம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் :
அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு வாழ்த்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள மஹிந்த  விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்கியுள்ளனர் எனவும் வடக்கில் 59 இராணுவ முகாம்களை அகற்றி அரசாங்கம் புலிகளுக்கு தலை தூக்க இடமளித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தற்போதைய அரசாங்கமோ ஒரு முகாமையேனும் நீக்கவில்லை. 59 முகாம்களும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்திலேயே நீக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி இராணுவம் வடக்கில் கைப்பற்றியிருந்த 11ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போதயை அரசாங்கத்தினால் இராணுவத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் வடக்கில் 59 முகாம்களை அகற்றியிருந்தால் அது எது என்ற பெயர்களை வெளியிடுமாறு நாம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சவால் விடுக்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.