செய்திகள்

மோடியின் வருகையை முன்னிட்டு கடும் பாதுகாப்பு: ஆயிரம் மேலதிக பொலிஸார் கடமையில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையம் முதல் கொழும்பு நகர்வரையில் விசேட வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேக்கரா தெரிவித்தார்.

மேல் மாகாணத்திலுள்ள சுமார் 100 பொலிஸ் நிலையங்களிலிருந்தும் போக்குவரத்து பொலிஸார் உட்பட பாதுகாப்பு கடமைகளுக்காக 1000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக விசேட பிரமுகர் பாதுகாப்பு பிரிவினரும் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளனர்.

நாளை 13ஆம் திகதி அதிகாலை 5.30 மணிமுதல் காலை 6.30 மணிவரையில் விமான நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலை, புதிய களனி பாலம், பேஸ்லைன் வீதி பொரளை, டி.எஸ்.சந்தி மற்றும் ஹோர்டன் பிளேஸ், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை லிபர்டி சுற்றுவட்டம், சென்ட்மைக்கல் சுற்று வட்டம், காலி வீதி, கொள்ளுப்பிட்டி, காலிமுகத்திடல் வரையும் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.