செய்திகள்

மோடியின் வருகை தமிழர்களின் விடியலாய் அமையவேண்டும் – ஜ.ம.மு உபபொதுச்செயலாளர் குகவரதன்

இந்தியப் பிரதமர் மோடியின் வருகை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வித்திடுவதாகவும் அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் முதன்மை விடயமாகவும் அமையவேண்டும் என வலியுறுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச்செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு வடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மோடி உறுதிப்படுத்தவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். பட்டதாரி மாணவர்களின் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பாக தெஹிவளை அலன் வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே சண்.குகவரதன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, அரசியல் கைதியான ஜெயக்குமாரியை மோடியின் வருகையின் நிமித்தம் அரசாங்கம் விடுதலை செய்யவுள்ளதாக அறிய வருகிறது. இது நல்லதொரு தீர்மானமாகும். இதேபோன்று நீண்டகாலங்களாக எதுவிதமான காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்.
இந்தியப் பிரதமர் மோடி இவ்விடயத்தில் மனிதாபிமான ரீதியில் கவனம் செலுத்தி இலங்கை அரசிடம் தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தவேண்டும். அது இந்தியாவின் தார்மீகக்கடப்பாடாகும். நீண்ட காலங்களாக எதுவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தமிழர்கள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்து மீண்டும் அவர்களை குடும்பங்களுடனும் சமூகத்துடனும் இணையும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அத்தோடு 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி வடமாகாணசபைக்கு அரசியல் அதிகாரங்களையும் தீர்மானங்களையும் எடுக்கும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவேண்டும். வடக்கு மக்கள் தமது சொந்தக்காணிகளில் அரசியல் ஜனநாயக உரிமைகளோடு வாழும் நிலைமையை இந்தியா ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். 1987இல் இந்தியாவால் வடக்கு தமிழ் மக்களுக்காக பிரசவிக்கப்பட்ட 13ஆவது திருத்தம் என்ற அரசியல் குழந்தை 27வருடங்கள் கழிந்தும் ‘தவழும்’ நிலையிலேயே உள்ளது.

எனவே குழந்தையை எழுந்து நடக்கச்செய்வது இந்தியாவின் மறுக்கமுடியாத கடப்பாடாகும். 27வருடங்களுக்கு பிறகு இந்தியப் பிரதமரொருவர் இலங்கை வரும் இந்த வரலாற்றுப் பொன்னாள் தமிழ் மக்களின் விடிவுக்கான நாளாய் அமையவேண்டும் என்றும் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார். இதன்போது பட்டதாரி மாணவர்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு படிப்படியாக இந்த அரசாங்கத்தில் தீர்வுகள் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாகவும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.