செய்திகள்

மோடியுடன் யோகா நிகழ்வில் சோனியா குடும்பம் கலந்துகொள்ளவில்லை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவருகிறது.

இன்றைய யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

கருத்து வேறுபாடுகள் மத்தியிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ராஜ்பாத் வந்து மோடியுடன் சேர்ந்து யோகா செய்தார். ஆனால், டெல்லியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சோனியா, மகள் பிரியங்கா மற்றும் மகன் ராகுல் ஆகியோர் தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.