செய்திகள்

மோடியும் மம்தாவும் ‘நண்பர்கள்’: ராகுல் காந்தி விமர்சனம்

மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வங்கதேசம் சென்றார். அப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் அவர் அழைத்தார். ஆனால் மம்தா வலுக்கட்டாயமாக மறுத்து விட்டார். நான் தனியாகத்தான் வங்கதேசம் செல்வேன் என்று கூறினார்.

இப்போது பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் சென்றுள்ளார். அவரது அழைப்பின்பேரில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமருடன் வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே புதிதாக நட்புறவு பிறந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்பது மக்களுக்கு தெரியும்.

விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி தொழிலதிபர்களுக்கு அளிப் பதில் மோடி முனைப்புடன் செயல்படுகிறார்.

முதல்வர் மம்தா பானர்ஜி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையுமே நிறைவேற்றவில்லை. சுத்தியல் (மார்க்சிஸ்ட் சின்னம்) அடி தாங்காமல் பூக்களை (திரிணமூல் சின்னம்) மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் சுத்தியலைவிட பூக்களின் அடி பலமாக உள்ளது என்றார்.