செய்திகள்

மோடி, சுஷ்மா தொலைபேசி மூலம் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து

சொத்துக் குவிப்பு வழக்கில் நிரபராதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகியுள்ளமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழக ஆளுநர் ரோசய்யா ஆகியோரும் ஜெயலலிதாவை வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு பற்றி நாட்டு மக்களே அவர்களுடைய சொந்த தீர்மானத்திற்கு வர முடியும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டில் இந்த தீர்ப்பு பற்றி கவலைப்படாமல் வலுவான தமிழகத்தை உருவாக்கவும், ஊழல் மற்றும் அடக்குமுறை நிறைந்த அரசாகத் திகழும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காகவும் பணியாற்றப்போவதகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எனினும் வழக்கில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேசமயம், வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகியிருப்பது ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி என்றும் இரண்டையும் காப்பாற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாக வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.