செய்திகள்

மோடி வருவதற்கு முன்னர் மீள்குடியேற்றத்தை பூரணப்படுத்துங்கள்: வலியுறுத்துகிறார் சுரேஷ்

வருகின்ற மாதம் நடுப்பகுதியளவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் அவர் யாழ்ப்பாணமும் வருகை தர இருக்கின்றார். ஆகவே அவரது யாழ்ப்பாண வருகையென்பது மிகமிக முக்கியத்துவமான வருகை. தமிழ் மக்கள் அவருடைய வருகையை முழுமனதுடன் வரவேற்கின்றார்கள். அதேசமயம். அவர் வருவதற்கு முன்பதாக இந்திய பிரதமருக்கு சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் இது தொடர்பில் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இந்த மீள் குடியேற்றமென்பது இன்னும் முழுமையாக முடியவில்லை. இப்போதும் மீள் குடியேற்றம் தொடர்பாக நாங்கள் அரசுடன் பேராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அகவே இந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்பட வேண்டும். இந்தியாவில் இருக்கும் அகதிகள் இங்கு வருவதை நாம் விரும்புகின்றோம். அவர்கள் இங்கு வருவதாக இருந்தால் முதற்கட்டமாக இங்கிருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும்.

அங்கிருந்து வரக்கூடிய மக்களுக்கான மீள்குடியேற்றத்திற்கான சகல ஒழுங்குகளும் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆகவே அவருடைய யாழ்ப்பாண வருகையென்பது இவ்வாறான விடயத்தை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதை பனிவன்புடன் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

இதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலை, அற்ப காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றார்கள். பல முக்கியஸ்தர்கள் வெளியில் நடமாடுகின்ற பொழுது அரசாங்கம் இன்னும் இவர்களை தொடர்ச்சியாக தடுத்து வைத்திருக்கின்றது. ஒரு குழுநியமிக்கப்பட்டாலும் கூட நாங்கள் இவர்களுக்கான பொது மன்னிப்பை கோரியிருக்கின்றோம். ஆகவே அவர்களும் விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது சொந்த வாழ்க்கையை நடத்தும் சூழ்;நிலையை உருவாக வேண்டும். இந்திய பிரதமரின் விஜயம் அதற்கும் வழியமைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

காணமல் போனோர் விடயத்தை எடுத்துக் கொண்டால் காணமல் போனோர் தொடர்பாக ஒரு கொமிசன் நியமிக்கப்பட்டு 2 வருடகாலம் அந்த கொமிசன் விசாரணை நடத்தி இதுவரையில் ஒருவரையேனும் கண்டுபிடித்து விடுவிக்காத சூழ்நிலையில் இந்த கொமிசனால் என்ன பிரயோசனம் என்ற கேள்வி நிச்சயமாக இருக்கின்றது. ஆகவே இந்த காணமல் போனோர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் திட்டவட்டமான செய்திகளை தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் என பலருக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். மக்கள் முன்னிலையில் இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆகவே இவர்கள் சரணடையவில்லை என்றோ, கைது செய்யப்படவில்லை என்றோ, கடத்தப்படவில்லை என்றோ கூறமுடியாது. இந்த விடயங்கள் எந்த வித பதில்களும் இல்லாமல் நீண்டு கொண்டு போவதென்பது உற்றார், உறவினர்களுக்கு இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் போகின்ற இடமெங்கும் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறக் கூடிய சூழல் இருக்கின்றது. ஆகவே இந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் இந்திய பிரதமரின் விஜயம் அமைய வேண்டும் நாங்கள் விரும்புகின்றோம்.

இந்தியப்பிரதமர் அவர்களை அன்புடன் நாங்கள் வரவேற்க தயாராக உள்ளோம். அவரது வருகையென்பது தமிழ் மக்களின் பல பிரச்சினைகளை தீர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசாங்கம் கொஞ்சம் இரக்கப்பட்டதனாலேயே வட மாகாணத்தில் ஆளுநர் மாற்றப்பட்டார். அந்த ஆளுநர் மாற்றப்பட்டதனால் முதன்மைச் செயலாளர் மாற்றப்பட்டார் என்ற நிலைதான் இருக்கின்றது. ஆகவே உரிமைகள் என்பது இரக்க்ததை அடிப்படையாகக் கொண்டு வழங்;கப்படுவதல்ல. உரிமைகள் என்பது மக்களுக்கு உரித்தானது. யாராலும் பறிக்கப்பட முடியாதது என்ற அடிப்படையில் தமிழ் தீர்வென்பது அமைய வேண்டும். 13 ஆம் திருத்தச்சட்டமென்பது அவ்வாறானதல்ல.

ஆகவே இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வை காணக்கூடிய வகையில், சரியான வகையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கூடிய வகையில் இந்தியா இந்தியா தொழிற்பட வெண்டுமெனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். 13 ஆவது திருத்தமென்பது அரசாங்கம் விரும்பினால் நடைமுறைப்படுத்தும். விருப்பமில்லாவிட்டால் விடுமென்ற சூழ்நிலைகள் ஒரு தீர்வுத்திட்டத்தில் இருக்கக்கூடாது. தீர்வுத்திட்டமென்று எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு நூறு வீதம் அது அமுல்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தமிழ் மக்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தம்மைத்தாமே வளர்ச்சியடையச் செய்து கொண்டு வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இந்தியப்பிரதமரின் விஜயம் இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றோம்.