செய்திகள்

மோடி விரைவில் கொழும்பு வருவார்: ஆட்சிமாற்றத்தையடுத்து மாறும் உறவுகள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது மோடிக்காக அழைப்பை விடுப்பார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்தே இந்தியப் பிரதமரின் பயணத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வருகிறது.  மைத்திரிபால புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து முததலாவது வெளிநாட்டுத் தலைவராக மைத்திரியுடன் தொடர்புகொண்ட மோடி தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் மாலை வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தநிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுக் காலையிலேயே அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாகவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி வருவதாகவும் அறிவித்தார். இந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன் இந்தப் பயணத்தின் போது இலங்கைக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கொடுத்தனுப்பும் அழைப்பையும் மங்கள சமரவீர கையளிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து இந்தியப் பிரதமரின் கொழும்புக்கான பயணம் விரைவில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடுத்த மாதம் புதுடில்லி வருவதாக மோடியிடம் உறுதியளித்திருக்கின்றார். இந்த நிலையில் மைத்திரியின் புதுடில்லி விஜயத்துக்கான முன்னோடியாகவும் மங்களவின் இந்திய விஜயம் அமையும்.