செய்திகள்

யாரும் அவமதிக்க கூடாது: தோனி சிறந்த கேப்டன்- ரெய்னா புகழாரம்

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததால் இந்திய அணி கேப்டன் தோனிக்கு நெருக்கடி ஏற்பட்டது.இதை தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒரு வீரராக செயல்பட தயார் என்று அறிவித்தார். வீரர்களின் மோதல் காரணமாக தோனி இதை வெளிப்படையாக தெரிவித்தார்.இந்த நிலையில் தோனி சிறந்த கேப்டன், அவரை யாரும் அவமதிக்க கூடாது என்று ரெய்னா கூறியுள்ளார்.

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு ரெய்னாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. 26 பந்தில் 38 ரன் எடுத்தார். அதோடு 3 விக்கெட்டும் கைப்பற்றினார்ஆட்டநாயகன் விருதை பெற்ற அவர் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:–

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்காக தோனியை குற்றம் சாட்டக்கூடாது. இப்போதும் நாங்கள்தான் தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ளோம். ஒரு தொடரை இழந்ததற்காக அவரை மோசமான கேப்டன் என்று கூறிவிட முடியாது. அவரை யாரும் அவமதிக்க கூடாது. பல்வேறு கோப்பைகளை பெற்று கொடுத்து பெருமை சேர்த்து இருக்கிறார்.

தோனி நல்ல மனிதர். மனிதநேயம் மிக்கவர். ஒரு சிறந்த கேப்டன் ஆவார். மனரீதியில் பலம் பெற்றவர். வீரர்களின் மனநிலையையும், ஆட்டத்தின் தன்மையையும் நன்கு அறிந்தவர். ஒவ்வொருவரும் அவரை நேசிக்கிறோம்.இந்திய அணி 317 ரன் குவித்ததற்கு தோனியின் பொறுப்பான ஆட்டமே காரணமாகும். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் 4–வது வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடினார்.

தவான், அம்பதி ராயுடு ஆகியோரது பேட்டிங்கும் நன்றாக இருந்தது. வங்காள தேச அணி கடந்த முறையை விட இப்போது சிறப்பாக விளையாடுகிறது. இன்னும் சிறந்த பார்ட்டனர்ஹிப் அமைய வேண்டும் என்று தோனி எங்களிடம் தெரிவித்தார். அதற்கு அவரே பொறுப்பேற்று ஆடினார்.

எங்களது பேட்டிங் அபாரமாக இருந்தது. 300 ரன்னுக்கு மேல் இலக்கு என்பதால் எங்கள் பவுலர்களுக்கு நெருக்கடி ஏற்படவில்லை. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள்.பல போட்டிகளில் பந்து வீசிய அனுபவத்ததால் என்னால் நன்றாக வீச முடிந்தது. என்னால் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட இயலும். அணியின் வெற்றிதான் முக்கியமானது.இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.