செய்திகள்

யாரைத் திருப்திப்படுத்தியிருக்கிறது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம்?

வீ. தனபாலசிங்கம் ( பிரதம ஆசிரியர், தினக்குரல் ) 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து பலவருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகள் இறுதியில் இன்று ஜனாதிபதியின் அதிகாரங்களில் மிகமிகச் சொற்பமானவற்றை குறைப்பதற்கு வகை செய்யும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் வந்து நிற்கிறது.

Parliament

இதை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைத்த கட்சிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “அரசியல் சாதனை’ யொன்று நிகழ்த்தப்பட்டிருப்பதாக தங்களுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும், அமைச்சர்களை நியமிப்பதிலும் அவர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதிலும் பிரதமருடன் ஜனாதிபதி ஆலோசனை செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தரப்பினால் முன்மொழியப்பட்டிருந்த ஏற்பாடு திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டாதிருப்பதை எதிர்க் கட்சியினால் உறுதி செய்யக் கூடியதாக இருந்த நிலை அந்த “சாதனையின்’ இலட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் பாராளுமன்றம் இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவருமென்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து, 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறையில் அரசாங்கத்திற்கு இருக்கின்ற அதிருப்தியை தெளிவாக எமக்கு விளங்கவைக்கிறது. மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்தில் 2010 செப்டெம்பரில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தச் சட்டத்தை செயலிழக்கச் செய்திருப்பதே 19 ஆவது திருத்தத்தின் மிகவும் பயனுறுதியுடைய அம்சமாகும்.

Srisena in Parliament

இருபதவிக் காலங்களுக்கு மாத்திரமே ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியுமென்ற முன்னைய ஏற்பாட்டை 18 ஆவது திருத்தம் நீக்கியிருந்தது. இப்போது மீண்டும் இருபதவிக்கால மட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருப்பதுடன், ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 6 வருட பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தபிறகே இந்த ஐந்து வருட பதவிக்கால ஏற்பாடு நடைமுறைக்கு வரும்.

இங்கு அவதானிக்கப்படக்கூடியதாக இருந்த விசித்திரமான அம்சம் என்னவென்றால் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்திய 18 ஆவது திருத்தத்தை எந்தவிதமான ஆட்சேபமும் தெரிவிக்காமல் அன்று ஏற்றுக் கொண்டுவாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 ஆவது திருத்தத்துக்கு பெருவாரியான மாற்றங்களை முன்மொழிந்து அதன் அடிப்படைநோக்கத்தையே பழாக்கிவிட்டு ஆதரவாக வாக்களித்ததுடன் நின்றுவிடாமல் அது நிறைவேறியதற்காக உரிமையும் கோரிக் கொண்டார்கள் என்பதுதான்.

புதிய திருத்தச் சட்டம் காலப்போக்கில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டு இறுதியில் ஜனாதிபதி ஆட்சி முறையே ஒழிக்கப்பட்டு விடக்கூடிய ஒரு நிலைக்கு வழிவகுக்குமென்று நம்பிக்கை வெளியிடும் அரசியல் அவதானிகளும் இருக்கிறார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்கள் பெருமளவுக்கு குறைக்கப்படுவதையோ அல்லது ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுவதையோ கடுமையாக எதிர்க்கின்ற ஜாதிகஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தங்களது நோக்கம் ஜனாதிபதி பதவியை ஜனநாயக மயமாக்குவதே என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ஜனநாயக மயமாக்கல் எதுவரைக்கும் போகும் என்பதை அவர் கூறவில்லை.

Rajapaksha

இதுகாலவரையில் இலங்கையில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள் தங்களது அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதிலேயே அக்கறை காட்டினார்கள். இதுவிடயத்தில் அவர்கள் சட்டபூர்வமானதும் சட்டவிரோதமானதுமான வழிமுறைகளைப் பின்பற்றியதையும் நாம் கண்டிருக்கிறோம். ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆட்சி நிறுவனக் கட்டமைப்புக்களில் எதேச்சாதிகாரப் போக்கு தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டுவந்திருக்கிறது. அந்தப் போக்கு ராஜபக்ஷ ஆட்சியில் ஒரு உச்சத்துக்கு வந்ததையும் அதன் விளைவாக நாட்டுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் குடியியல் சுதந்திரங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டதையும் அனுபவரீதியாக நாம் கண்டிருக்கின்றோம்.

இவர்கள் எல்லோருடனும் ஒப்பிடும் போது வேறுபட்ட ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணப்படுகின்றார் என்பதில் சந்தேகமில்லை. தனக்கிருக்கின்ற அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்வருகின்ற வேறு ஒரு தலைவரை உலகில் எங்குமே காணமுடியாது என்று அவரே கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது. அதிகாரங்களைக் குறைப்பதற்கு இணங்குவதென்பது ஒன்றும் மைத்திரிபால சிறிசேன நாட்டுமக்களுக்கு செய்கின்ற சலுகையல்ல. ஆட்சி முறையில் இருந்து எதேச்சாதிகாரப் போக்கை இல்லாமற் செய்து புதியதொரு ஜனநாயக அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதற்காகவே மக்கள் ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் இவருக்கு வாக்களித்தார்கள். ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டு மென்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்ட அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பெருமளவில் அவரை ஆதரித்து நின்றன. நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தின் போதாமைகள் குறித்து அதிருப்தியை வெளியிட்டிருக்கின்ற போதிலும், இந்த அமைப்புகள் தற்போதைக்கு இதையாவது நிறைவேற்றக் கூடியதாக இருந்ததே என்பதற்காகத்தான் வரவேற்றிருக்கின்றன என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதொரு அம்சமாகும்.

Maithiri and Chandrikaராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய தினம் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க சகிதம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றியபோது, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்தார். ஆனால் சில தினங்கள் கழித்து எதிரணியின் பொதுவேட்பாளர் என்ற முறையில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற மட்டுமீறிய அதிகாரங்களைக் குறைப்புச் செய்து அவற்றை பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் பகிர்ந்தளிக்கப்போவதாகவே இவர் குறிப்பிட்டிருந்தார். மைத்திரிபால சிறிசேன தனது மூலமுதல் வாக்குறுதியிலிருந்து விலகிவிட்டார் என்று அரசியல் அவதானிகளும் முற்போக்கு சிந்தனை கொண்ட புத்திஜீவிகளும் உடனடியாகவே சுட்டிக்காட்டிய போதிலும், தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் அவர்களது எச்சரிக்கைகள் கவனிக்கப்படாமல் போய்விட்டன. இறுதியில் இப்போது நிறைவேறியிருக்கும் அரசியலமைப்புத்திருத்தமும் கூட, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒப்பிட்டளவில் குறைந்தளவு எதிர்பார்ப்புக்களைக் கூட பூர்த்திசெய்யவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டுமென்ற அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கணிசமானளவுக்குக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை நடத்தியர்களையல்ல அந்த ஆட்சிமுறையை ஒழிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களையே 19 ஆவது திருத்தம் திருப்திப்படுத்தியிருக்கிறது.