செய்திகள்

யார்  அடுத்த முதலமைச்சர்?

அக்கரையூரான்

யாழ்ப்பாண வீதிகளெல்லாம் ‘மாவை’ யாருக்கே நன்கு தெரியும்! அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். இன்றும் அம்மண்ணிலேயே வாழ்கின்றவரென்பதால் அவரையே முதல்வர் பதவிக்குப்  பொருத்தமானவராகக் கருதமுடியுமே தவிர முன்னாள் நீதியரசரான சி.வி. விக்னேஸ்வரன் ஒப்பீட்டளவில் அப்பதவிக்கும், பொறுப்பிற்கும் எந்தவகையிலும் அதற்குத் தகுதியானவரென்றோ  மாவையாருக்கு நிகரானவரென்றோ கருதிவிடமுடியாதென அன்று …. வடபுலத்தேர்தல் களத்தில் முதலமைச்சர் ‘வேட்பாளராக யாரைக் களமிறக்குவதென்ற சர்ச்சைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மேலெழுந்து நின்ற வேளையில் மிகவும் அநாகரீகமான முறையில் தனது கருத்தை  வாதத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்த தமிழரசுக் கட்சியின் உறுதிமிக்க  புதிய பற்றாளனாகத் தன்னை அடையாளப்படுத்தியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேத்திரன் தன்னையே விலாசப்படுத்திக் கொண்டேதோடு, அத்தகைய கருத்தினால், கிழக்குத் தமிழ் மக்களையும் அன்று முகஞ்சுழிக்க வைத்தாரென்பது தமிழர் அரசியலில் யாவரும் அறிந்திருந்த தகவல்களாகும்.

ஆனால் இன்று தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலின் இறுதி அவலத்திற்கும்  கொடூரத்திற்கும் பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் அரச தரப்பின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்களிலிருந்தும் மீண்டுகொள்வதற்காகத் தங்களையே வருத்தி தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை  தமிழர்களின் நலிவடைந்த இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தவரை இன்றைய வடபுல முதல்வரான சி.வி. விக்னேஸ்வரனும் தமிழர்களுடைய அரசியல் போக்குகளில் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பும்  அம்மக்களின் இன்றைய நிலையும் எவ்வாறு இருந்திருக்குமென்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.

சிலவேளை மேற்குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிபார்சு செய்ததைப் போல மாவையாரையே தமிழர் தரப்பு தேர்ந்தெடுத்திருந்தால் அவரும்  சம்பந்தனும் தமிழ் மக்களை எங்கு கூட்டிச் சென்றிருப்பார்களென்பதை எண்ணிப்பார்த்தால் இலங்கை வரைபடத்தில் வடக்கும்  கிழக்கும், தமிழ் மக்களும் ஏதோ ஒருவகையில் இல்லாமல் போகக்கூடிய ஆபத்துகள் உருவாகியிருக்குமென்பதே அக்கட்சியின் (தமிழரசு) அண்மைக்கால ஏகபோகச் செயற்பாடுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

தமிழ் மக்களின் நீண்டகால  எதிர்கால அரசியல் அபிலாஷைகள்  எதிர்பார்ப்புகள் என்ன என்பது தொடர்பில் இன்று சர்வதேசமும் (இந்தியா உட்பட) சில விடயங்களைப் புரிந்து கொள்கின்றதென்றால் வடபுல முதல்வரென்ற ஆளுமைமிக்க ஒருவரால் தமிழ் மக்களின் உண்மையான விம்பத்தையும்  அவர்களின் உண்மையான நாடித்துடிப்பையும் வரலாற்று ரீதியாகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டி வருகின்றார் என்பதே உண்மை நிலையாக இன்றுள்ளது.

வடமாகாண சபையின் ஆட்சிக்காலமென்பது நிறைவுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருடத்திற்கு உட்பட்ட காலஎல்லையே மீதமாக இருக்கக்கூடிய சூழலில், இனிமேல் வரப்போகின்ற வடமாகாணத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் யாராக இருக்க முடியுமென்ற எதிர்பார்ப்பும்  அதே மாவையாரே அதற்குத் தகைமையானவரென்ற கோணத்தில் தமிழரசுக் கட்சியின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் அண்மையில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழில் நடைபெற்ற கூட்டமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

வடமாகாண சபையில் முதலமைச்சருக்கெதிராக அண்மையில் தமிழரசுக் கட்சியினாலும், தேசியக் கட்சிகளின் அனுசரணையோடும் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பின்னரான சூழலென்பது குடாநாட்டில் மட்டுமல்லாது, இந்நாட்டில் இருக்கக் கூடிய ஒட்டுமொத்தத் தமிழர்கள் (தமிழரசுக் கட்சி தவிர்ந்த) புலம்பெயர் வாழ் சமூகமும் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஆதரவான பல்மடங்கு நிலையை உருவாக்கியிருந்ததுடன் அத்தீர்மானத்தை வலிந்து கொண்டுவந்த தமிழரசுக் கட்சி மீதும் மக்களும், பல்கலைக்கழக சமூகமும் கடுங்கோபங்கொண்டு திரண்டனர். முதல்வருக்கு புதியதொரு மனோதிடத்தையும் அம்மக்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள் என்றே கூறவேண்டும். இன்றைய கருத்து நிலைப்படி வடபுலத்தில் மக்களின் ஏகோபித்த செல்வாக்கை இன்றும் கொண்டவராகவே முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் காணப்படுகின்றாரென்பது ஒருமிகைப்படுத்தலான செய்தியோ தவறான கணிப்பீடோ அல்ல.

wigneswaran

அவ்வாறான ஆதரவு நிலையையும் மேவிச் செல்லக்கூடிய ஒருவரை தமிழரசுக் கட்சி வேட்பாளராகக் களமிறக்க இரகசியத் திட்டங்களை வகுத்துக்கொண்டு தானிருக்கிறது. எந்த வகையிலும் விக்னேஸ்வரன்  வடக்கு அரசியல் களத்திலிருந்தும், தமிழரின் அரசியல் களத்திலிருந்தும் எப்படியோ விரட்டியடிக்க வேண்டுமென்பது தமிழரசுக் கட்சியின் கொள்கை வகுப்பு மட்டுமல்ல ஸ்ரீகொத்தாவின்  அலரிமாளிகையின் குறிப்பாக கொழும்பின் நிகழ்ச்சி நிரலும் அதுவாகத்தான் இன்றுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரன் இன்று ஒரு அதிகாரம் படைத்தவராக உள்ளதால் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமல்ல அதன் தலைவர்களுக்கு மட்டுமல்ல இன்றைய தேசிய அரசாங்கத் தரப்பினருக்கும் பாரிய இடையூறு விளைவிப்பவராகவே காணப்படுகிறார். அந்த வகையில் அவர் அகற்றப்பட வேண்டும். இனியொரு தேர்தலில் அவர் மக்கள் செல்வாக்குடன் வெற்றிவாகை சூடிக்கொள்ளக்கூடாதென்பதே கொழும்பின் இரகசியத் திட்டம். அத்திட்டத்தைச் செயற்படுத்தப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களே 1949 ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்ததாகவும் புலம்பிக் கொள்கிறார்கள்.

தங்களை எவரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. மக்களுக்கு எதை எந்த நேரத்தில் செய்யவேண்டுமென்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறிக் கொள்ளும் தலைவர்களே ஊடக சந்திப்புகளில் ஊடகத்துறையினரால் கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் சரியான பதிலெதனையும் கூறாமல் அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கே அவர்களுடைய மக்கள் சார் சிந்தனைகள் வெளிப்பட்டு நிற்கின்றன.

நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறி… ‘நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை’யெனக் கூறுவது போல நாங்கள் சொல்வதையே அனைவரும் கேட்க வேண்டுமே தவிர எங்களிடம் சுட்டு விரலைக் காட்டிக் கேள்வி கேட்கக் கூடாதென்ற சிந்தனையில் உச்சக் கட்ட நிலையில்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைகின்ற நிலையில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது உட்கட்சி ஜனநாயகத்திற்காக.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய கொதிப்பு நிலைக்கும் சிக்கலான வெளிப்பாடுகளுக்கும் மூலகாரணம் தமிழரசுக் கட்சியானவர்களே அவர்களின் ஜனநாயகமற்ற பண்புகளின் வெளிப்பாடுகளும்  சமூகநலன் அற்ற செயற்பாடுகளே இத்தகைய முரண்பாடுகளுக்கான அடிப்படைகளாகும்.

எதைச் செய்கிறோமெனப் புரியாமல்  அவசரமான கொள்கையற்ற முடிவுகளினால் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனின் விடயத்தில் தமிழரசுக் கட்சி தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டது போல கையை சுட்டுக் கொண்டதுபோல மற்றுமொரு முடிவுக்கு தமிழரசுக் கட்சி இனிமேல் செல்லாதென எவரும் கணிப்புச் சொல்ல முடியாது. அவரின் பல்லைப் பிடுங்குவதற்கான சந்தர்ப்பம் எப்போது வருமெனக் காத்திருக்கும் நிலையில்தான் இன்று தமிழரசுக் கட்சியும்  அதன் தலைவர்களும் சரியான நிகழ்ச்சி நிரலுடன் தயாராக உள்ளார்களென்பதைப் புரிந்து கொள்ளாதவர்களாக வடபுலமக்கள் இல்லை.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் களத்தில் இன்றைய முதல்வருக்கான அபேட்சகர் அனுமதியை தமிழரசுக்கட்சியானது மறுதலிக்குமேயானால், தமிழ் மக்கள் பேரவையிலல்ல… சுயேச்சையாக சி.வி. விக்னேஸ்வரன் களமிறங்கினாலும் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக யாரைத் தீர்மானித்துக் களமிறக்கினாலும் அந்நபரை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் இன்றைய முதல்வர் சி.வி.  அன்றும் வெற்றிவாகை சூடிக்கொள்வாரென்பதை தமிழரசுக் கட்சியும்  அதன் தலைவர்களும் பட்டறிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

sam, wig, mavai and sumo

எதிர்காலத்தில் வடமாகாணத்தில் வரக்கூடிய முதல்வர் பெருந்தேசியக் கட்சிகளின் கொள்கைகளுக்கும், அக்கட்சிகளின் செயற்பாட்டிற்கம் , சிந்தனைகளுக்கும் ஏற்புடையவராக இருப்பதையே விரும்புகின்றனர். இன்றைய மைத்திரி  ரணில் கூட்டு அரசாங்கமும் கூட சி.வி. விக்னேஸ்வரன் முதல்வராக இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வடபுல முதல்வராக இருந்து அவ்வப்போது வெளியிடும் கருத்துகளால், அறிக்கைகளால் இன்றைய நல்லாட்சிக்காரர்களுக்கு வீணான தொல்லைகளையும், சிக்கல்களையும் உருவாக்குவதாகவுமுள்ளதாக அவர்கள் எண்ணிக் கொள்கின்றார்கள். அத்தகைய சூழலில் சம்பந்தனைப் போன்றவர்கள் யாரேனும் வடமண்ணில் தலைவராக வருவார்களாக இருந்தால் இன்னும் எவ்வளவோ விடயங்களை இலேசாகச் சாதித்துவிடலாமென்பது பெருந்தேசியக் கட்சிகளின் மறைமுகமானதும், வெளிப்படையானதுமான நிகழ்ச்சி நிரல்களாகும்.

இத்தகைய பின்னணியிலேதான் இன்றைய முதல்வரை தமிழரசுக் கட்சியும் , அதன் தலைவர்களும் பரம எதிரியாகப் பார்க்கின்றார்கள். இந்த நிலைமைக்கான எதிர்காலத் தீர்வென்பது வடமாகாண தேர்தல் அடுத்த வருடம் நடைபெற்றால் அத்தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் ஒருவரைக் களமிறக்குவதால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாமென்பது மென்போக்குத் தலைமையின் அதீத நம்பிக்கையாகவுள்ளது.

இத்தகைய சூழலில்தான் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாவையாரின் பெயரை இப்போதே சொல்லத் தொடங்கியிருக்கிறார் என்பதை ஆழமாக நோக்கலாம். அத்துடன் யாழ். மண்ணிலிருந்துதான் ஒருவரை தமிழரசுக் கட்சி நியமிக்க அதிக வாய்ப்புகள் தென்படுகின்றன. ஏனெனில் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுபவர் கொழும்பிலிருந்தோ ஏனைய பிரதேசங்களிலிருந்தோ இறக்குமதி செய்யப்படுபவர்களாக நிச்சயமாக இனிமேல் இருக்கக் கூடாதெனக் கூறி இன்றைய முதல்வருக்கும் சாட்டையடியைக் கொடுத்திருக்கிறது அக்கட்சி.

இவ்விவகாரத்தில் எப்படியான முடிவுகளை தமிழரசுக் கட்சி எடுத்தாலும் அக்கட்சியின் அச்சாணியைக் கழற்றிவிடுவதற்குத் தமிழ் மக்கள் தீர்மானித்து விட்டார்களென்பதும் களநிலமையாக இன்றுள்ளது.

இதனிடையே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் கொதிநிலையானது அதன் உச்சநிலையை அடைந்திருப்பதாகவே எண்ண முடிகிறது. அண்மையில் பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கையின் முன்மொழிவுகள் பற்றிக் கருத்துக் கூறுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்த சூழலில் தமிழரசுக் கட்சிமீதான அதிருப்திகளும், உட்கட்சி ஜனநாயகத்திற்காகப் போராடும் (அகிம்சைவாதிகளுக்கெதிராக) அபரிமிதமான சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

mavai-suma-sri

ஒருவயது முதிர்ச்சியடைந்த தலைவரான சம்பந்தன் இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கடைபிடித்துவந்த ‘ஜனநாயகம்’ இதுதானா? என சாதாரண பொதுமக்கள் சந்திகளில் , நம் உள்ளூர்த் தெருக்களில், பொது இடங்களில் அலசிக் கொள்ளும் அளவிற்கு  பேசிக் கொள்ளுகின்ற கடைசி நிலைக்கே தமிழரின் அரசியல் வரிந்து கட்டி நிற்கிறது.

சுரேசுடன் நான் நேரடியாகப் பேசுகிறேனெனக் கூறும் சம்பந்தன் இடையில் ஏற்படும் சில்லறைப் பிரச்சினைகளுக்கெல்லாம் கூட்டமைப்பை விட்டு விலகிச் செல்ல முடியாதென ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தார். ஆனாலும் , சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் என்பவை தனிநபர்கள் சார்ந்ததல்ல. தமிழ் மக்களின் கொள்கை சார்ந்தது. அவர்கள் வழங்கிய ஜனநாயக ஆணைக்கு மாறானது. கடந்த தேர்தல்களில் தமிழ்த் தரப்பு வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிரானது. இத்தகைய விடயங்களில் எதையுமே விட்டுக் கொடுப்பதற்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியிருக்கவில்லை. மக்கள் தமது அடிப்படையான விடயங்களை எத்தகைய நிலையிலும் விட்டுக் கொடுப்பதற்கும் தயாராக இல்லாத சூழலிலேயேதான் நாம் (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதென்பது கொள்கைரீதியில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக உள்ளது. இவ்வாறான சூழலில் அக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் எந்தத்தேர்தலிலும் எமது கட்சியினால் இணைந்து போட்டியிடுவதென்பது முடியாத விடயமாகவும் இருக்கிறதெனக் கூறியுள்ள அவர் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகிக் கொள்ளவில்லையென்பதையும் கோடுகாட்டியிருந்தார்.

இந்த இடத்தில்தான் சம்பந்தனின் (தமிழரசு) எதேச்சாதிகாரம் பற்றிநோக்கும்போது அவரை எப்படி? ஒரு மென்போக்குத் தலைவராக  அஹிம்சை வாதியாகப் பார்க்கமுடியுமென்ற பிறிதொரு சந்தேகமும் அனைத்து மக்களிடமும் பொதுவாக எழுகிறது.

கொள்கைகளைக் காப்பாற்ற முடியாத கட்சிகளும், மக்களின் ஆணையை மதிக்காத தலைவர்களும் நீண்டகாலத்திற்கு அரசியல் தாக்குப் பிடித்து நிற்க முடியாதென்பதே உலகத்தின் பல நாடுகளின் (தலைவர்கள்) வரலாறுகள் எமக்குப் பாடமாகவும், முன்மாதிரியாகவும் அமைந்திருப்பதையும் பாரம்பரியக் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் உள்ளக முரண்பாடுகளை ஒரு முடிவிற்குக் கொண்டுவரும் சிந்தனையின் ஒரு முயற்சியாக மன்னார் ஆயர் இல்லத்தில் ஆண்டகை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் குருமுதல்வர் சோசை தலைமையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கான கூட்டமொன்றும் ஏற்பாடாகியிருந்தது. அக்கூட்டத்தில் நான்கு கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். தங்களின் கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்தல் உட்பட பலவிடயங்களை (இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டமை) பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெளிவுபடுத்தியிருந்தார். அதேபோல் சட்டத்தரணியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான ஸ்ரீகாந்தாவும் இன்றைய கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள் தொடர்பிலும், மக்களின் உரிமைகள் பெற்றுக் கொள்ளப்படும்வரை நாம் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தாலும், தமிழரசுக் கட்சியின் தவறுகளை அக்கட்சியின் ஜனநாயாக மறுப்புத் தொடர்பான சூழலை அவர்தொட்டுக் காட்டியிருக்கவில்லையென்பது பொதுவான ஒரு குறைபாடாகும்.

அதேபோன்று வடமாகாண விவசாய அமைச்சரும் புளொட்டின் முக்கியஸ்தருமான சிவநேசன் (பவான்) பொதுவாகவே ஒற்றுமையாக நாம் பயணிக்க வேண்டுமென்ற பாணியிலேதன் பேசியிருந்தார்.

ஆனால், இவையெல்லாவற்றையும் அவதானித்திருந்த மாவை சேனாதிராஜா பேசும்போதும் எமது கட்சியை நோக்கிப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் நாம் அவ்விடயங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையென்ற அவரின் கருத்துநிலை எத்தகைய விமர்சனங்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஏனென்றால் நாம் ஜனநாயகத்தை மதிப்பவர்கள்  வன்முறையை நிராகரிப்பவர்கள் என்ற புதியதொரு பாணியிலே எதையும் பிடிகொடுக்காமல் சற்று அடக்கமாக வாசித்திருந்தார்கள்.

கூட்டத்தின் இறுதியில் கருத்துரை வழங்கியிருந்த குருமுதல்வரான சோசை அடிகளார் ஒற்றுமையின் வகிபாகத்தை அழுத்தமாக வலியுறுத்தியிருந்ததோடு மீண்டும் ஒருமுறை அனைவரினதும் பிரசன்னத்துடன் விரிவாகப் பேசி இந்த இழுபறியான போக்கு தொடர்ந்து செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார். பிறிதொரு சந்திப்புக்கான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்பட்டாலும் எப்போது என்பது பற்றிய விடயங்கள் சரியாகத் தீர்மானிக்கப்படவில்லையென்றாலும்இதுபோன்ற பல கூட்டங்கள் இதே மன்னார் மாவட்டத்தில் அதுவும் ஆயர் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பாகவும், பங்காளிக் கட்சிகளிடையேயான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகள் கூட அன்றைய மன்னார் ஆயராகத் தனது பணியைத் தொடர்ந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலும் நடைபெற்றிருந்தும்… இதுவரை அத்தகைய முயற்சிகளின் தொடர்ச்சி நீண்டுகொண்டே செல்கிறது.

இத்தகைய சூழலில்தான் கடந்தவாரம் தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டமும் வவுனியாவில் நடைபெற்றிருக்கிறது. அக்கூட்டத்தில் கூட தங்களுடன் இன்றிருக்கும் ஏனைய கட்சிகளை எப்படி வளைத்துப் போடுவதென்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதே தவிர மக்களின் நலன்களிலிருந்து எத்தகைய முடிவுகளும் எடுப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைமை சிந்திக்கவில்லையென அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இப்பத்தியாளரின் நண்பரொருவர் அலைபேசியில் தனது மன ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாரென்பதும் இரகசியமானது.

மக்களுக்கான அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு முன்னோக்கி நகர்வோமென்ற கருத்தானது அக்கூட்டத்தில் பெரிதாக வெளிப்பட்டிருக்கவில்லை. அவ்விடயம் இன்றைய தமிழர்களின் அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொண்டாவது தமிழ் மக்களின் நலன்களிலிருந்து ஒற்றுமையென்பது முன்னிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது அங்கு நடைபெறவில்லை.

இருந்தும் கூட்டம் நிறைவுற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது, பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், ஜனநாயக ரீதியாக எமது கட்சியே (தமிழரசு) அண்மைக்காலமாகப் பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்கனவே நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்துள்ளன. பலதேர்தல்களிலும் முழுமையான வெற்றிகளை எட்டியிருக்கிறது. நான்கு கட்சிகளிடையே சில உடன்பாடுகளும் காணப்பட்டிருக்கின்றன என்பதைச் சகல மக்களும் அறிவார்கள்.

இவ்வாறானதொரு சூழலில் , ஐந்தாவது கட்சியாக மேலுமொரு கட்சியைப் பதிவு செய்வதென்பது தேவையற்ற ஒரு செயற்பாடுமென்பதோடு, அவ்வாறு ஒரு கட்சியாக பதிவு செய்கின்ற விடயத்தில் நான்கு கட்சிகளின் முழுமையான சம்மதம் பெறப்படவேண்டும். அவ்விடயத்திற்கு எமது கட்சியாகிய தமிழரசுக் கட்சி  விரும்பவில்லை. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதென்பது எந்தவகையிலும் சாத்தியமற்றதென்பதை சுற்றிவளைத்துச் சொல்லியிருந்தார். இதே மாதிரியான கருத்தை அதே பாராளுமன்ற உறுப்பினர் புலம்பெயர் நாடொன்றில் வைத்து தமிழ் ஊடகமொன்றிற்குக் கருத்து வெளியிடும்போது  வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டால் தங்களுடைய கட்சியின் கடைசி அச்சாணியும் கழற்றப்பட்டு விடுமென்பதே அவர்களுக்கு இருக்கும் மனப்பயம். அதேவேளை,

மற்றுமொரு சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன் கூட பதிவு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்குப் பதில் வழங்கும்போது இதுதொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை, தலைவர், செயலாளர், உயர்மட்டத் தலைவர்களென பலருடனும் பேசிய பின்னர்தான் அதுதொடர்பான முடிவொன்றிற்கு வரமுடியுமே தவிர , உடனடியாக  அவசரமாக அவ்விவகாரத்தில் எத்தகைய தீர்மானங்களையும் எடுக்க முடியாதென வலியுறுத்தியிருந்தார்.

பொதுவானதொரு பெயரில் அக்கட்சியைப் பதிவுசெய்தலும், தேர்தல் சின்னமொன்றைத் தீர்மானிப்பதிலும் தமிழரசுக் கட்சியுடன் எந்தவிதத்திலும் முரண்பட்டுக் கொள்ளாமல் செயற்படுகின்ற புளொட்டும், டெலோவும் நிதானமான முடிவொன்றுக்கு மக்கள் நலன்களிலிருந்து பொதுமுடிவொன்றிற்கு வராதவரையில் அவ்விவகாரம் கல்லில் நாருரிக்கும் செயற்பாடாகவே அவ்வப்போது தோன்றி மறையும். ஏனெனில், சித்தார்த்தன் சம்பந்தனின் அதிதீவிர விசுவாசி. அடுத்த முறையும் தான் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றால் தமிழரசுக் கட்சியின் தயவில்தான் அதுநடைபெறவும் வேண்டும். ஆகவே…. சம்பந்தனைப் பகைத்துக் கொண்டால் அக்கனவு நடைபெறாமலே போய்விடுமென்பது சித்தரின் சிந்தனை. ஆகவே எத்தகைய அரசியல் சூழலிலும் உணர்ச்சி வசப்படக்கூடாதென்பது அவரின் அடிப்படைக் கொள்கையாகும்.

அதேபோன்று செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்றைய குழுக்களின் பிரதித் தலைவர் பதவியைக் கொடுத்து (சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்புப் பதிவு விடயத்தில் டெலோவைக் கையாளக்கூடாது என்பதற்காக) அழகுபார்த்ததும், தமிழரசுக் கட்சியின் எல்லாவிதமான செயற்பாட்டிற்கும் ‘ஆமாம்சாமி’ போட வைப்பதற்கும் பிள்ளையார் சுழிபோட வைத்ததே இதே சம்பந்தனும், சுமந்திரனும்தான்.

இந்தப் பதவிநிலை விசுவாசத்தை விட்டு எத்தகைய நிலையிலும் குழுக்களின் பிரதித் தலைவரும் அவரின் கட்சியான டெலோவும் தமிழரசுக் கட்சிக்கெதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டார்களென்பதே அக்கட்சியின் பரிதாபநிலை. இதைச் சட்டத்தரணியாக இருக்கும் சிறிகாந்தா அடிப்படையில் புரிந்துகொள்ளல் அவசியமானதாகும்.

TNA-5

இந்த இரண்டு கட்சிகளின் பலமும்  பலவீனமும் தமிழரசுக் கட்சிக்கும் சம்ந்தன்  சுமந்திரன் போன்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் வரை … இப்படியானவர்களின் உண்மையான அரசியல் முகத்தை வாக்களிக்கும் மக்கள் புரிந்து கொள்ளாதவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பாக மன்னார், ஆயர் இல்லத்திலல்ல ரோம் நகரில்  வத்திகானில் போப்பாண்டவர் கூட்டம் போட்டுப் பேசினாலும் தமிழரசுக் கட்சி சமரசம் எதற்கும் வரப்போவதில்லையென்பதே அக்கட்சியின் நிலையாகும்.

இவ்விடயத்தில் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியவர்கள் வாக்களிக்கும் தகைமை கொண்ட மக்களேயாவர். அவர்களால் மட்டுமே இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரமுடியுமென்பது இப்பத்தியாளரின் கருத்துமாகும்.

அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் போக்குகள் பிடிக்காதவர்கள் அக்கட்சியின் செயற்பாட்டை ஜீரணிக்கமுடியாதவர்கள் ஒன்றாக இணைந்து புதிய அரசியல் அணியொன்றை உருவாக்கிக் கொள்வதனால் மட்டுமே  அதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென்பது மட்டுமே இன்று ஓரளவேனும் சாத்தியமாகக்கூடிய நிலைமையாகவுள்ளது.

இந்தக் கருத்தியலையொட்டி அண்மையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ யின்  கூட்டமொன்றும் அவசரமாகக் கூட்டப்பட்டிருக்கிறது. அக்கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரும் கலந்து கொண்டதாக அறியக் கிடைக்கிறது. அப்புதிய முன்னணியை வைத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் உட்பட சகல தேர்தல்களிலும் களமிறங்கப் போவதாகவும் (தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன்) பரவலான செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

எது எப்படியிருப்பினும், வாக்காளர்களான மக்கள் சகல கட்சிகளினதும் செயற்பாடுகளையும், அவர்களின் கருத்துகளையும் நன்கு அவதானித்துக் கொண்டிருப்பதால்… நொந்துபோன மக்களை இடைநடுவில் கைவிட்டுவிட்டு, கொள்கைகளையும் மறந்து, மக்கள் அளித்த ஜனநாயக ஆணையையும் மறந்து, இணக்க அரசியல் செய்யும் கபடத்தனமான அரசியல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் சிறந்ததொரு பாடத்தைப் புகட்டுவார்களென்பது அவர்களுக்கான இறுதி எச்சரிக்கையாகவும் கருதமுடியும். புரிந்து கொள்வார்களா மென்போக்குத் தலைவர்கள்?.