செய்திகள்

யார் இந்த தீபக் ஹூடா?

ஐபிஎல்-லின் இளைய வீரரான ஹூடா பற்றித்தான் எல்லா இடங்களிலும் பேச்சு. ஆடிய இரண்டு மேட்சுகளிலும் சிக்ஸர் மழை பொழிந்து ராஜஸ்தான் அணிக்கு இரண்டு வெற்றிகளைக் கொடுத்திருக்கிறார் 19 வயது ஹூடா. ராஜஸ்தான் அணியிலிருந்து உருவாகியுள்ள புதிய சூப்பர் ஸ்டார்.

இன்று பக்கா டி20 வீரராக அறியப்பட்டுள்ள ஹூடா, ரஞ்சியிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு முன்பு, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் (2014), முதல் வாய்ப்பு கிடைத்தது. நன்றாக ஆடி, இந்தியாவின் 2-வது சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் என்கிற இரு பெருமைகளை அடைந்தார். (6 மேட்சுகள், 235 ரன்கள், 11 விக்கெட்டுகள்) அடுத்து பரோடா ரஞ்சி அணியில் ஆட வாய்ப்பு. முதல் ரஞ்சி சீசன் என்றாலும் தடுமாற்றம் இல்லாமல் 500 ரன்களுக்கும் மேல் எடுத்தார். 8 ஆட்டங்களில் 2 சதங்கள், 2 அரைச் சதங்கள். முதல் போட்டியிலேயே சதமடித்த 2-வது பரோடா வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.

ஹரியானாவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்றாலும் அப்பாவின் வேலை மாற்றலால் டெல்லி, வதோதராவில் வாழ்ந்துள்ளார். ஹூடாவின் தந்தை முன்னாள் கபடி வீரர். அதனால் மகனின் கிரிக்கெட் ஆர்வத்துக்குத் தடை போடாமல் டெல்லி வீட்டின் பின்பு மகனுக்காக கிரிக்கெட் பிட்ச் அமைத்து ஊக்கம் அளித்துள்ளார். 16 வயதில் அலெம்பிக் என்கிற மருந்து கம்பெனி ஒன்று இவருக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளது. அதன்மூலம் இர்பான் பதானின் நட்பு கிடைத்து, பிறகு, அவருடன் இணைந்து பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்தார். “இர்பான் பதானின் வாழ்க்கையே பெரிய உத்வேகம் அளிக்கக் கூடியது” என்கிறார் ஹூடா. U 19 உலகக் கோப்பை போட்டியின்போது லோயர் ஆர்டரில் ஆடிய ஹூடா, இப்போது மிடில் ஆர்டரிலும் ஆட ஆரம்பித்துள்ளார். தோனி போல இறுதிக் கட்டத்தில் நன்றாக ஆடக்கூடியவர் என்று பெயரெடுத்ததுதான் ஐபிஎல்-லில் உதவியுள்ளது. இவர் மீது நம்பிக்கை வைத்து, சென்ற வருடம் 40 லட்சம் ரூபாய்க்குத் தேர்ந்தெடுத்தது ராஜஸ்தான். ஆனால் ஒரு மேட்சில்கூட ஆட வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த ஒருவருடத்தில் நிறைய வளர்ந்துவிட்டதால், இப்போது வாய்ப்பு கொடுத்துப் பார்த்தது.

முதல் இரு ஆட்டங்களிலேயே, அட, யாருங்க இவர், என்னமாக சிக்ஸர் அடிக்கிறார் என்கிற ஆச்சரியத்தை உருவாக்கிவிட்டார். பஞ்சாப்புக்கு எதிராக 15 பந்துகளில் 30 ரன்கள். 3 சிக்ஸர்கள். டெல்லிக்கு எதிராக 25 பந்துகளில் 54 ரன்கள். 4 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் – 210.00. இரண்டிலும் ஆறாவதாகக் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார் ஹூடா. அதிலும் டெல்லிக்கு எதிராக இவர் ஆடவரும்போது 107 ரன்கள், 56 பந்துகள் என்கிற கடினமான இலக்கு இருந்தது. ஆனால் அதிரடியாக ஆடி, மேன் ஆப் தி மேட்ச் பட்டம் வென்றார். ”எந்த பவுலர் வீசுகிறார் என்று பார்க்கமாட்டேன். சிக்ஸர் அடிக்கவேண்டிய பந்து என்றால் நிச்சயம் அடித்துவிடுவேன்” என்று பேசுகிறது பயமறியாத இளங்கன்று. டெல்லி 184 ரன்கள் குவித்தபோதும் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஹூடா (ஆஃப் ஸ்பின்னர்).

மற்றொரு U 19 புகழ் வீரர்,உன்முக்த் சந்த் போல தீபக் ஹூடாவுக்கும் டைரி எழுதும் பழக்கம் உண்டு. “நன்றாக ஆடியபோது என்ன மனநிலையில் இருந்தேன் என்பதை அறிய உதவுகிறது” என்கிறார். மோசமாக ஆடும்போது டைரியை எடுத்துப்பார்த்துக்கொள்வாராம். பேஸ்புக், வாட்ஸ்அப்பில் மூழ்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இன்னமும் டைரியில் நாட்குறிப்புகளை எழுதும் அதிசய இளைஞர். ”ராஜஸ்தான் அணி என்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. கடைசி வரை பொறுப்பாக ஆடவேண்டும் என்று ராகுல் டிராவிட் கூறுவார். நான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் பவுலிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்துவேன்” என்கிறார் ஹூடா.

ஒரு புதிய திறமை என்பது இந்த இரு மேட்சுகளிலேயே கண்கூடாகத் தெரிகிறது. ரஞ்சி, ஐபிஎல் என இரண்டிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் ஹூடா மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. யூசுப் பதான் இன்னமும் அவுட் ஆஃப் பார்மில் இருந்து மீண்டுவரவில்லை. ஜடேஜாவும் சமீபகாலமாக நிறைய சொதப்புகிறார். ஒரு நல்ல ஆல்ரவுண்டரின் தேவை இந்திய அணியில் உண்டு. ஹூடா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வாரா என்று பார்க்கலாம்.