செய்திகள்

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில பகுதிகளை விடுவிப்பதற்கான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்களில் மேலும் குறிப்பிட்டளவான பகுதிகள் மக்களின் குடியேற்றத்துக்காக மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளது.இது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெறும் இக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற நடவடிக்கைக் குழுவினர், உடுவில், கோப்பாய், தெல்லிப்பழைப் பிரதேச செயலர்கள், வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர்,இராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளுள்ள மக்களுடைய பகுதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு அதில் மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.எனப் புதிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மேற்படி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டு மக்களுடைய குடியேற்றத்துக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவற்றில் வலி.வடக்குப் பிரதேசத்தில் ஏழு கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவிலேயே விடுவிக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய விடுவிக்கப்படாமல் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் கண்ணிவெடி அபாயம் காணப்படுவதால் மக்களை அங்கு மீள்குடியேற அனுமதிக்க முடியாது எனவும் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அந்தப் பணிகள் முடிவுற்ற பின்னர் மீள்குடியேற்றத்துக்காக மக்களிடம் கையளிப்பதாகவும் கடந்த தடவை நடைபெற்ற மீள்குடியேற்றக் குழுக் கூட்டத்தில் இராணுவத் தரப்பினரால் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே பகுதியளவில் விடுவிக்கப்பட்ட ஏழு கிராம சேவகர் பிரிவுகளில உள்ள மேலுமொரு தொகுதி நிலப்பரப்பை விடுவித்து மக்களிடம் கையளிப்பது தொடர்பாகவே எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இது தவிர ஏற்கனவே விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்குத் தேவையான வீட்டுத்திட்டம், மலசல கூடம், குடிநீர் விநியோகம் போன்றன அமைத்துக் கொடுத்தல் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படுமெனவும் தெரிய வருகின்றது.