செய்திகள்

யாழில் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பான கூட்டம் 2 ஆவது தடவையும் ஒத்தி வைப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களின் நிலங்களை மிள்குடியேற்றத்திற்காக விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் இரண்டாவது தடவையாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் உத்தரவின் படி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதிகளில் குறிப்பிட்டளவு நிலங்கள் மீள்குடியேற்றத்துக்காக அனுமதியளிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் மூன்றாம் கட்ட மீள்குடியேற்றம் தொடர்பாகவும், இதுவரை குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்வதற்கான கூட்டம் கடந்த 7 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்று 29 ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்ட போதும் நேற்றுக் கூட்டம் நடைபெறவில்லை.

இதேவேளை குறித்த கூட்டத்தை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளதாகவும்,8 ஆம் திகதியும் உறுதியான திகதியல்ல எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.நகர் நிருபர்-