செய்திகள்

யாழில் போதைப் பொருளை இல்லாதொழிக்க விஷேட பொலிஸ் பிரிவு அவசியம்: டக்ளஸ்

யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் 28 இடங்கள் யாழ். மாவட்ட செயலகத்தினால் இனங்காணப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவ் விபரங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

எனவே, கடந்த காலங்களில் தென்பகுதியில் போதைப் பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கும், இதற்கென தனியானதொரு விஷேட பொலிஸ் பிரிவை அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்து யாழ், நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியபோது, யாழில் மதுபானம் மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அதிகக் குற்றச்சாட்டுக்களை தன்னிடம் முன்வைத்ததாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் தற்போது போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் கேந்திர இடமாக மாறிவருவதை உணரக்கூடியதாக உள்ளது. இதனை இல்லாதொழிப்பதற்கு இன்றே உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், எமது சமுதாயத்தின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும்.

எனவே, விஷேட போதைத் தடுப்புப் பிரிவொன்றை அமைத்து, இதனை பலமுள்ளதாக செயற்பட வைத்து, யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரம் போதைப் பொருள் தொடர்பில் மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சமூக அமைப்புக்களும் முன்வரவேண்டியது அத்தியவசியமாகும். அதற்கானதொரு பொறிமுறையினையும் நாம் உருவாக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.