செய்திகள்

யாழில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி பழமையானதாக இருக்க முடியாது: மஹிந்தா

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி பழைமையானதொன்றாக இருக்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களை ஆறுதல்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இது பழைமையானதொன்று என்ற தகவல் வெளியிடப்பட்டதே ஒழிய அது பொய்ப்பிரசாரமே என்றும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் நிறைவுற்றுள்ள போதிலும் புலனாய்வுப் பிரிவினரது சேவை நாட்டிற்கு மிக அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டி – கெட்டம்பே விகாரைக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ச, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

புலனாய்வுப் பிரிவினரை சேவையில் ஈடுபடுத்துவதை விடுத்து நல்லாட்சி அரசாங்கம் அவர்களில் சிலரை சிறையில் அடைத்து வைத்திருக்கின்றது என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தாம் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவித்த அவர், அதுகுறித்து பின்னர் தெளிவுபடுத்தவிருப்பதாக பிரதமர் இதன்போது பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார்.

புலனாய்வுப் பிரிவு சேவையை நல்லாட்சி அரசாங்கம் இடைநிறுத்திய சந்தர்ப்பத்தில் தாம் அதற்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டதாக மஹிந்த ராஜபக்ச மேலும் கூறினார்.

N5