செய்திகள்

யாழில் விமானத்துறை பயிற்சி பெறும் மாணவர்களின் இந்திய கல்வி சுற்றுலா (படங்கள் இணைப்பு )

விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக இந்தியா செல்வது தொடர்பில் இந்தியத் துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை அவர்களை இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து உரையாடினார்.

பலாலி விமான நிலையம் இன்னும் முழுமையாக சிவிலியன் பாவனைக்கு வராத நிலையில், யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமைந்துள்ள ஏஞ்சல் சர்வதேசப் பள்ளியில் (Angel International School) விமானத்துறை கல்வி மற்றும் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், விமான நிலையங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு, யாழ்ப்பாணத்தில் இல்லை என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

30 ஆண்டுகால யுத்தம் காரணமாக, இலங்கையின் வடக்கு பகுதியில் சிவில் விமானத்துறை வளர்ச்சி பெறாத நிலையில், தற்போது விமானத்துறை பயிற்சி பெறும் மாணவ மாணவிகளில் இரண்டு பேரை தவிர, வேறு யாரும் தமது வாழ்க்கையில் ஒருதடவைகூட விமானத்தில் ஏறியதில்லை. இதையடுத்து, இவர்களுக்கு விமானத்துறை கல்விச் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் வளர்ச்சிப் பணிகளில் பல திட்டங்களை மேற்கொள்ளும் லெபாரா பவுன்டேஷன் அமைப்பு, விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலா செல்வதற்கான பயண அனுசரணை வழங்கியுள்ளது. இவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வழியாக கொச்சின் (கேரளா), சென்னை (தமிழகம்) ஆகிய விமான நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது லெபாரா பவுன்டேஷன் அமைப்பு.

விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகளின் கல்விச் சுற்றுலாவுக்கு, இந்திய மத்திய அரசின் பங்களிப்பாக, கொச்சின் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் ஏற்பாடுகளை செய்துவருகிறார், இந்திய துணைத் தூதர் திரு. ஏ.நடராஜன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகளிடம் பேசிய அவர், அவர்களது கல்விச் சுற்றுலாவில் பங்களிப்பு செய்வதில், இந்திய மத்திய அரசு பெரு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் விமானத்துறை கல்வி, மற்றும் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு தேவையான எந்த உதவியையும் நாம் செய்ய தயாராகவுள்ளோம்” என்று தெரிவித்த இந்திய துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் அவர்கள், “யாழ்ப்பாணத்தில் உங்களது பயிற்சி வகுப்புகளை நேரில் வந்து பார்க்க மிக்க ஆவலுடன் உள்ளேன்” எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் சென்றடையும் மாணவ, மாணவிகள், கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் (CIAL – Cochin International Airport Limited) இயங்குமுறை, வெவ்வேறு செயல்பாடுகள், விமானத் தரைக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை பார்வையிடுவதுடன், அங்குள்ள பயிற்சிக்கூடம் ஏவியேஷன் ஆகாடமியையும் பார்வையிட இந்திய துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் ஏற்பாடு செய்துவருகிறார்.

அத்துடன் கொச்சின் விமானநிலையத்தில் இந்திய தேசிய விமான சேவை எயார் இந்தியாவின் (Air India) இயங்குமுறைகளையும் இலங்கை மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்கிறது.

இந்த மாணவ, மாணவிகள் இலங்கை திரும்பும்போது சென்னை விமான நிலையத்திலும் அறிமுக சுற்றுலா (Familiarization Tour) மேற்கொள்வதற்கும் இந்திய துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் ஏற்பாடு செய்துவருகிறார்.

jaff-emb-1 jaff-emb-2 jaff-emb-3 jaff-emb-4 jaff-emb-5 jaff-emb-6 jaff-emb-8