செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்துக்கு படகில் வந்த ஐயப்ப பக்தர்: தனுஷ்கோடியில் கைது!

தமிழகத்தின் கரையோர மாவட்டமான தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை ஐயப்ப பக்தர் ஒருவரை இன்று புதன்கிழமை தமிழகத்தின் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் விசாரணைகளுக்காக தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பகுதியை சார்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (24) என்ற ஐயப்ப பக்தரே இன்று காலை கைதானவராவார். இவர் சபரிமலைக்குச் செல்வதற்காக செவ்வாய்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ்பாணம் கடற்கரை பகுதியிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல் முனைப்பகுதிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் வந்தடைந்தார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் ஐயப்ப பக்தர் ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என தகவல் தமிழக க்யூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் வரவே மணிகண்டனை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதான அவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “13 வருடங்களுக்கு முன்னர் மண்டபம் அகதிகள் முகாமில் படித்தேன் பின்னர். 2002க்கு பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் போர் ஒப்பந்தம் ஏற்பட்டு அமைதியாக இருந்த காலகட்டத்தில் திரும்பவும் கிளிநோச்சிக்கு குடும்பத்தோடு சென்று விட்டோம். சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை. எனவே படகு மூலம் தனுஷ்கோடி வந்தேன்” என்றார்.