யாழ்ப்பாணத்தில் அதிக நூல் வெளியீட்டு விழாக்கள் நடப்பது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது: இந்திய தூதரக அதிகாரி
தற்போது யாழ்ப்பாணத்தில் தினசரி ஏதாவதொரு நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுக் கொண்டிருப்பது மிகவும் வியப்புக்குரியதாகவும் பெருமைக்குரியதாகவும் அமைந்துள்ளது:யாழ்.இந்தியத் துணைத் தூதரக நிர்வாக அதிகாரி.
இந்தியத் துணைத் தூதரகத்தின் சார்பில் யாழ்.மாவட்டத்திலுள்ள பல நூலகங்களுக்கும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறோம்.தொடர்ந்தும் எங்களால் இயன்றளவு நூல்களை நூலகங்களுக்கு வழங்கி வாசிப்பை ஊக்கப்படுத்துவோம்.தற்போது யாழ்ப்பாணத்தில் தினசரி ஏதாவதொரு நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் வியப்புக்குரியதாகவும்,பெருமைக்குரியதாகவும் அமைந்துள்ளது என தெரிவித்தார் யாழ்.இந்தியத் துணைத் தூதரக நிர்வாக அதிகாரி ஆர்.செல்வம்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுநூலகத்தின் சிறுவர் சஞ்சிகையான ‘மொட்டுக்களின் மொழிகள்’ நூல் வெளியீட்டு விழா அண்மையில் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நூல்கள் இந்த உலகத்தை நாங்கள் பார்ப்பதற்கான கண்ணாடி.தமிழ்மொழியில் ஏராளமான இலக்கியங்கள் காணப்படுகின்றன.திருவள்ளுவர்,கம்பர்,பாரதியார் போன்ற புகழ் பெற்றவர்களின் நூல்கள் மாத்திரமன்றி தமிழிலுள்ள கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள்,சுயசரிதைகள் எனப் பலதரப்பட்ட விடயங்களையும் தேடிக் கற்கும் போது எமது அறிவின் எல்லை விரிவடைகிறது.
சிறுபிள்ளைகளுக்குப் புதிதாகப் புத்தகங்களை வழங்கும் போது அவர்களின் சந்தோசத்திற்கு அளவில்லை.
என்னுடைய சிறுவயதில் நான் அதிகளவில் நூலகங்களை நேசித்திருக்கிறேன்.தற்போது வேலைப்பளு காரணமாக நூலகங்களுக்குச் செல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.சிறு வயதினருக்கு ஏனைய விடயங்களை விடக் கதைகள் வாசிப்பதில் தான் அதிக ஆர்வமிருக்கும்.கதைகள் படிக்கும் போது அதிலிருந்து நாங்கள் பலவித படிப்பினைகளைப் பெற முடியும்.ஆகவே கதைகள் படிப்பதில் தவறில்லை.ஆனால்,கதைகளில் மாத்திரம் கவனம் செலுத்துவதுடன் நின்று விடாது எமது பாடப்புத்தகங்களைக் கற்பதிலும்,வேறு பயனுள்ள நூல்களைக் கற்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.அங்கே பெரும்பாலான இடங்களில் பொக்கற் அளவுள்ள சிறிய நூல்களை விற்பனை செய்வார்கள்.அவ்வாறான நூல்களை ரயில் மற்றும் பேருந்தில் பிரயாணம் செய்பவர்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள்.ரயிலில் பிரயாணம் செய்யும் போது நூல்கள் படித்த அனுபவம் எனக்குமுண்டு.இதன் மூலம் நான் பெற்ற அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
புதிய யுகத்தில் கணனி மற்றும் நவீன தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக அமைந்தாலும் நூல்களை வாசிக்கும் போது பெறும் அனுபவம்,மனநிறைவு என்பன அலாதியானது.நாங்கள் குறைந்தது இரண்டு மணி நேரமாவது பலதரப்பட்ட நூல்களையும் தேடிக் கற்க வேண்டும்.
கொக்குவில் பொதுநூலகத்தால் ‘மொட்டுக்களின் மொழிகள்’ என்னும் தலைப்பில் சஞ்சிகை வெளியிடுவது அருமையான முயற்சி.பல சிறுவர்களின் உணர்வுகளை ஆக்கங்களாகப் பதிவாக்கி வெளியிடுவது அவர்களது பெற்றோர்களுக்கும்,ஏனையவர்களுக்கும் நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.இந்தச் சஞ்சிகை இனிவரும் காலங்களில் வருடத்திற்கொரு தடவை வெளியிடப்படுமெனக் கூறப்பட்டது.மூன்று மாதங்களுக்கொரு தடவை வெளியிடுவது மாணவர்களுக்குப் பயனள்ளதாக அமையும் எனவும் அவர் மேலும் கூறினார்.
யாழ்.நகர் நிருபர்-