செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்தவர்களின் முகங்களை மறக்க முடியாது: டேவிட் கமரூன்

இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புகூறப்படவேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஓருபோதும் மறக்காது, அதேபோன்று செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவுள்ளோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பிற்கு முன்னதாக இலங்கை குறித்த தனது எதிர்பார்ப்புகளை தமிழ் கார்டியனில் பதிவு செய்துள்ள அவர் அதில் இவ்வாறு குறிப்பிட்டள்ளதுடன் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கைக்கு 2013 இல் விஜயம் செய்த தருணத்திலிருந்து இலங்கையின்கடந்த கால விவகாரங்களுக்கு தீர்வு காண உதவுவது குறித்தும், அந்த நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் அமைய உதவுவது குறித்தும் நான் உறுதியாக இருக்கிறேன்.

எனது விஜயத்தின் பின்னர் மோதலில் ஈடுபட்ட சகல தரப்பினரும் இழைத்துள்ள யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. மேலும் அந்த நாட்டு மக்கள் புதிய ஜனாதிபதி ஓருவரை தெரிவுசெய்துள்ளனர்.அவர் நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தனது முழுமையான உறுதி;ப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் , பொருளாதார சமூக சீர்திருத்தங்கள் மூலமாகவும், கடந்த கால விவகாரங்களுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தீர்வு காண்பதன் மூலமாகவும் இலங்கைக்குள்ள பாரிய சாத்தியப்பாடுகளை பயன்படுத்த முனைவதற்கு புதிய அரசாங்கத்திற்கு உண்மையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியுடனான முதலவாது சந்திப்பின் போது அவருக்கான எனது செய்தி இதுவாகவே அமைந்திருக்கும்.  இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிப்பது,இராணுவ ஆளுநர்களை நீக்குவது,தமிழர் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக வடக்கிற்கு சென்றமை போன்ற நம்பிக்கையளிக்க கூடிய நடவடிக்கைகளை அவர் ஏற்கனவே எடுத்துள்ளார்.

அவருக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவிற்குமுற்றிலும் மாறான விதத்தில் சிறிசேன எடுத்துள்ள வெளிப்படையான முற்போக்கான நடவடிக்கைகளுக்கு பதிலாகவே ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை வெளியிடுவதை மேலும் ஆறு மாதங்களுக்கு பிற்போடுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணiயாளரின் யோசனைக்கு நாங்கள் ஆதரவளித்தோம்.

இலங்கையில் நேர்மையான நல்லிணக்கத்தை காணவிரும்புவதாலும்,மேலதிக கால அவகாசத்தை வழங்குவது இலங்கை அரசாங்கம் தான் வாக்குறுதியளித்துள்ள படி ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்தற்கு வழிவகுக்கும் என்பதாலும், இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்க உதவுவதற்குமே நாங்கள் இதற்கு ஆதரவளித்தோம்.

தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு நான் ஜனாதிபதி சிறிசேனவை கேட்டுக்கொள்வேன்,இலங்கை அரசாங்கம் தனது சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் இதே வேகத்தில் முன்னெடுக்கவேண்டும்.வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதன் முலமாகவும்,இராணுவத்தின் பிடியிலிலுள்ள மேலதிக நிலங்களை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலமும்,குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதன் மூலமாகவும் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டும்.

இலங்கையை முன்னோக்கி நகரவிடாமல் தடுத்துவைத்துள்ள சவால்களுக்கு தீர்வை காணுமாறு நான் சிறிசேனவை கேட்டுக்கொள்வேன்,மனித உரிமையை பலப்படுத்துவது, ஊழலை ஓழிப்பது,அரசியல்ரீதியான பொறுப்புக்கூறலை அதிகரிப்பது,ஊடக சுதந்திரத்தை அதிகரிப்பது,போன்ற விடயங்கள் ஐனநாயக அரசாங்கத்திற்கு அடிப்படையான விடயங்கள்.
இலங்கை ஜனாதிபதியால் தன்னுடைய சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியுமானால் அவரால் நிச்சயமாக யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றமுடியும். ஓரு வருட காலத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்தவர்களின் முகங்களை என்னால் மறக்க முடியாது,தாங்க முடியாத துயரங்கள் மற்றும் இழப்புகள் குறித்து அவர்களது கதைகள் என்றும் என் மனதில் தங்கியிருந்து மாற்றங்களுக்கான முயற்சிகளை முன்னெடுக்கச்செய்யும்.
நான் அங்கு கேட்டதும் பார்த்தும், நான் ஏன் அங்கு சென்றேன் என்பதை சுட்டிக்காட்டும் விடயமாக அமைந்துள்ளது.
அங்கு அவ்வேளை முன்னேற்றங்கள் எதுவும் காணப்படவில்லை என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும், சீர்திருத்தங்களுக்கான சர்வதேச அழுத்தங்களை எற்படுத்துவதற்காகவுமே நான் யாழ்ப்பாணம் சென்றேன்.

இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் அதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறச்செய்யவேண்டும். அதனை நாங்கள் மறக்கமாட்டோம், அதன் காரணமாகவே 2015 செப்டம்பருக்குள் ஐ.நா விசாரணை அறிக்கைவெளியாகி அது குறித்து விவாதிக்கப்படவேண்டும் என நாங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரும் தெளிவாக தெரிவித்துள்ளோம்.நாங்கள் அதனை பின்பற்றுவோம். இன்னும் ஆறு மாத காலத்திற்கு பின்னர் உலகின் கவனம் மீண்டும் இலங்கை மீது விழும், என தெரிவித்துள்ளார்.