செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கு உடன் தடை!

யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. மணல் அகழ்வினால் நிலத்தடி நீருக்கும் சுற்றாடலுக்கும் ஏற்படுகின்ற பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த தடையை அமுல்படுத்தியுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றாடல் ஆய்வு நிறைவுபெறும் வரை யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளை விட யாழ்குடாநாட்டில் சுற்றாடல் அமைப்பு மாறுபட்டதாக காணப்படுவதாகவும் அநேகமான மக்கள் நிலத்தடி நீரையே நம்பிவாழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் குடாநாட்டில் இடம்பெறுகின்ற மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய சுற்றாடல் ஆய்வு நிறைவுபெறும் வரை குடாநாட்டிற்கு உள்ளேயும், கரையோரப் பகுதிகளிலும் மணல் அகழ்வை நிறுத்துவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. யாழ் குடாநாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.