யாழ்ப்பாண வன்முறைச் சம்பவங்கள்: ரணில் தலைமையில் கலந்துரையாடல்
புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியின்போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் மகளிர் விவகார பிரதியமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் யாழ்.குடாநாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின்போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைதுசெய்வதில் காட்டப்பட்ட தாமதமே மக்கள் கிளர்தெழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரே நடவடிக்கை எடுக்க வேண்டும். இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் புங்குடுதீவு மாணவி படுகொலை விசாரணை உரிய வகையில் நடத்தப்பட வேண்டும். குடாநாட்டின் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருடன் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குடாநாட்டின் நிலைமை தொடர்பாகக் கேட்டறிந்ததுடன் பதற்ற நிலைமையை சுமுகமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்தோடு தத்தமது அரசியல் கட்சிகளின் யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் சென்று அமைதி நிலையை ஏற்படுத்தவும் அது தொடர்பில் பொலிஸாருக்கு ஆதரவு வழங்குமாறு தத்தமது கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகளை வழங்கவும் இவ் பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.