செய்திகள்

யாழ்மாணவர்களின்கல்வி மட்டுமல்ல அவர்களின் உயிர்களும் பாதுகாக்கப்படவேண்டும்: அங்கஜன் இராமநாதன்

யாழ்மாணவர்களின் கல்வி மட்டுமல்ல, அவர்களின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய குடிதண்ணீர் தாங்கியில் நஞ்சுகலக்கப்பட்டமை தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

குடிதண்ணீர் என்பது பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் இவ்வாறான பிரச்சனைகளை தவிர்க்கலாம். கல்வி என்பது எவராலும் அழிக்க முடியாத சொத்தாக காணப்படுகின்றது. அந்த வகையில் எமது பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியை சிதைக்கும் முகமாக விசமிகளால் திட்டமிட்டு மாணவர்கள் பருகும் தண்ணீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரியது.

இதனால் மாணவர்களும் பாடசாலை சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விசமத்தனத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் இனம் காணப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக என்னாலான சகலமுயற்ச்சிகளையும் மேற்கொள்வேன்.

சின்னஞ்சிறிய குழந்தைகளை யாரும் தமது சொந்த அபிலாசைகளிற்கு ஆயுதங்களாக பயன்படுத்த வேண்டாம். அவர்கள் எங்கள் நாட்டின் முதுகெலும்புகள். அவர்களை பாதுகாக்க நாம் அனைவரும் இனமதமொழிபேதமின்றி ஒன்றிணைவோம்.

இவ்வாறான விசமிகளை இனங்கண்டு உரிய தண்டனை வழங்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன் என அதில் தெரிவித்தார்.