செய்திகள்

யாழ்.கட்டுவனில் மாத்தையா குழுவின் அட்டகாசம்

யாழ்.கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை சென்ற மாத்தையா குழுவினர் என அழைக்கப்படுவோர் வீடு தேடிச் சென்று இளைஞரொருவரை வாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுச் சிறிது நேரத்தில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மாத்தையா குழுவெனக் கூறப்படும் குழுவொன்றைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் தெல்லிப்பழைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் பற்றி இதுவரை தெரியவரவில்லை.இதே பகுதியைச் சேர்ந்த எஸ்.நிதர்சன் என்ற இளைஞரே குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.

குட்டுவன்,ஏழாலை முதலான இடங்களில் மாத்தையா குழுவினர் முன்னரும் பல அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தச் சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-