செய்திகள்

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசைக் கண்டறிவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் உதவியைக் கோரியுள்ள யாழ்.மருத்துவ சங்கம்

யாழ்.சுன்னாகம் மற்றும் யாழ்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் நிலத்தடி நீர் மாசு தொடர்பில் முறையான ஆய்வினை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்திடம் யாழ்.மருத்துவ சங்கம் உதவி கோரியுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் முரளி வள்ளிபுரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியான டாக்டர் அநந்தமதூருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் பிரதிகளை அவர் யுனிசெப்பின் இலங்கைப் பிரதிநிதி, சுகாதார அமைச்சர், வடக்குமாகாண ஆளுநர், முதலமைச்சர் உட்பட 11 பேருக்கு அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுன்னாகம் மற்றும் யாழ்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் நிலத்தடி நீர் மாசு குறித்துச் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்ட ஆய்வில் 150 கிணறுகளில் 109 கிணறுகளில் கிறீஸ் மற்றும் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உடுவில், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 30 கிணறுகளின் மாதிரியை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் பரிசோதனை செய்ததில் எண்ணெய், கிறீஸ் கலந்திருப்பது உண்மையெனவும், ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி பகுதியின் நிலத்தடி நீரின் மாசு குறித்து ஆராய்வதற்கும், அதனை முறையான படிமுறையில் மேற்கொள்வதற்கும் உபகரணங்களை வழங்குமாறு அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.