செய்திகள்

யாழ் குடாநாட்டில் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீடிக்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு, யாழ் மாவட்டக் கிளையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார அதிகாரிகளை தமது சங்கத்தினர் நேற்று சந்தித்துப் பேசியதாகவும், இதன்போதே அவர்களின் பரிந்துரைகளுக்கு மாறாக ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுவிஸ் மதகுருவினால் தொற்றுக்குள்ளான 16 பேருடன் தொடர்பில் இருந்த 320 பேரில் இன்னமும் 80 பேருக்கு கொரானா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

16 தொற்று நோயாளர்கள், மதபோதகருடன் இருந்து கோரோனா தொற்றிக்குள்ளாகியதும் அவருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேர்களில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படாமலும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமலும் இருப்பதால், வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 27 இற்கு பிறகு மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீக்க பரிந்துரைத்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பரிசோதனைகளை ஆகக் குறைந்தது இந்த நெருங்கிய தொடர்புகளுடன் செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்தின் சமூக தொற்று நிலை சம்பந்தமான வெளிப்பாடு மேம்படும்.குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் பல்வேறு வியாதிகளுக்கு மருத்துவமனைகளுக்கு வருவார்கள். மேலும் கோவிட் -19 க்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய எல்லா மருத்துவமனைகள் இன்னமும் தயார் நிலையில் இல்லை.இந்நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்க வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(15)