யாழ்.குப்பிளான் காளி அம்பாள் ஆலயத்தில் ‘சக்தி மகத்துவம்’ மலர் வெளியீடு
யாழ்.குப்பிளான் காளி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ‘சக்தி மகத்துவம்’ கும்பாபிஷேக மலர் வெளியீடும்,தித்திக்கும் தேனமுதம் திருவாசக இறுவட்டு வெளியீடும் கடந்த திங்கட்கிழமை (2104.2015) பிற்பகல் ஆலய மகா மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உதவிப் பணிப்பாளரும்,பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் ஆசியுரையையும், இணுவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.சசிதரன் வரவேற்புரையையும் ஆற்றினர்.
சக்தி மகத்துவம் நூலையும்,இறுவட்டையும் ஆலயத் தலைவர் செ.பரராஜசிங்கம் வெளியிட்டு வைக்க ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.நூலின் வெளியீட்டுரையை சிறுகதை எழுத்தாளரும்,நெல்லியடி மத்திய மகாவித்தியாலய ஓய்வு நிலை ஆசிரியருமான குப்பிளான் ஐ.சண்முகன் ஆற்றியதுடன் ஆய்வுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.பாலசண்முகனும் நிகழ்த்தினர்.நன்றியுரையை ஆலய பரிபாலன சபைத் தலைவர் கு.குகதாசன் வழங்கினார்.
குறித்த நூல் 80 பக்கங்களைக் கொண்ட அழகிய அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது.இந் நூலில் ஆலய வரலாறு,குப்பிளானைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியை திருமதி .தங்கமுத்து தம்பித்துரை,சைவப்புலவர் ஏ.அனுசாந்தன்,கனடாவைச் சேர்ந்த ச.சதானந்தன்,சமூக ஆர்வலர் கதிரிப் பிள்ளை தங்கவேல் ஆகியோர் எழுதிய காளியின் மகிமை தொடர்பான கட்டுரைகளும்,யாழ்.பல்கலைக்கழக ஓய்வு நிலை ஆங்கில விரிவுரையாளர் ச.விநாயகமூர்த்தி,ஓய்வு நிலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளரும்,பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்,சைவப் புலவர் சு.செல்லத்துரை,சித்தாந்த ரத்தினம் கலாநிதி க.கணேசலிங்கம்,பிரித்தானியாவைச் சேர்ந்த நா.புஸ்பநாதன்,கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன்,ஆன்மீகச் சொற்பொழிவாளர் இரா.கேதீசன் ஆகியோர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகளும்,சிறுகதை எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன் எழுதிய ‘எங்கள் காளி மாதா’ கவிதையும் இடம்பெற்றுள்ளன. யாழ்.நகர் நிருபர்-