யாழ். சர்வதேச மார்க்ஷியக் குழுவின் பகிரங்கக் கலந்துரையாடலில் எதிரொலித்த வலிகாமம் குடி நீர்ப் பிரச்சினை (படங்கள்)
யாழ்.சர்வதேச மார்க்ஷியக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 12.04.2105 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மாதாந்தப் பகிரங்கக் கலந்துரையாடலின் போது யாழ். வலிகாமம் குடிநீர்ப் பிரச்சினையும் எதிரொலித்தது.
வலிகாமம் பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்த விடயம் தொடர்பில் கடும் வாதப் பிரதி வாதங்களும் இடம்பெற்றன.
இதன்போது சட்டத்தரணி டி.ரெங்கன் சர்வதேச மர்க்ஷியக் குழுவின் தலைவர் பொ.சிவபாலனைப் பார்த்து வலிகாமம் குடிநீர்ப் பிரச்சினை தற்போது காணப்படும் ஆழமான பிரச்சினை. கூர்மையடைந்துள்ளதொரு பிரச்சினை. இது குறித்து நீங்கள் நிச்சயம் கருத்தரங்கு வைத்திருக்க வேண்டும்.
இதற்குப் பதிலளித்த யாழ்.சர்வதேச மார்க்ஷியக் குகுழுவின் தலைவர், ஒரு விடயம் குறித்துக் கலந்துரையாடுவதற்கு முழுமையான தகவல்கள் காணப்பட வேண்டுமென்று கூறினார்.
இதன் போது குறுக்கிட்ட சட்டத்தரணி டி.ரெங்கன், நீங்கள் சமகால அரசியல் போக்குகள் மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு விடயங்களில் கலந்துரையாடுவதற்கு பூரணமான தகவல்கள் பெற்றுத் தான் கலந்துரையாடுகிறீர்களா? எனக் கேள்வி கேட்டார். இதற்குப் பதிலளிக்க முடியாது தலைவர் திண்டாடினார்.
தொடர்ந்து பேசிய சட்டத்தரணி டி.ரெங்கன், அனுராதபுரத்திலே ஹிட்னிப் பிரச்சினை இதை விடப் பாரதூரமான நீண்டகாலப்பிரச்சினை அப்போது அமைச்சராகவிருந்தவர் தான் இன்று ஜனாதிபதி. இதன் போது ஜே.வி.பி.சார்பாக அரசாங்கத்திடம் பிரச்சினைக்கான தீர்வு கேட்டுச் சென்ற போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வடமாகாணத்தைப் பொறுத்த வரை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமென்று கருத முடியாது என்று கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் தலைவர் சுகு தோழர், வடமாகாண சபை நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனக்கு எதுவும் தெரியாதென்கிறார். நிபுணர் குழுவின் அறிக்கை வெளிப்படையாக முழுவதும் வெளியிடப்படவில்லை எனவும் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
இதன் போது கலந்து கொண்ட சமூக ஆர்வலரொருவர் கருத்துத் தெரிவிக்கையில், நிபுணர் குழுவை நியமித்தது வடமாகாண சபை. நிபுணர் குழு வடமாகாண சபைக்கு அறிக்கையைக் கையளித்து அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். வடமாகாண சபை இந்த விடயத்தில் நழுவல் போக்கில் செயற்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற ஆசிரியரொருவர், தற்போது வடமாகாணத்தில் 200 மில்லியன் முதல் 400 மில்லியன் ரூபா வரை மாதாந்தம் நீரின் விற்பனை இடம்பெறுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பொதுமகனொருவர், எதிர்காலத்தில் பெற்றோலைவிட நீரின் விற்பனை தான் அதிகளவில் இடம்பெறப் போகிறது. எதிர்வரும் காலங்களில் பெற்றோல் சைட் சென்று பெற்றோல் பெற்றுக் கொள்வதைப் போல நீரும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கும் தொனியில் கூறினார்.
யாழ்.நகர் நிருபர்-