செய்திகள்

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான புதிய சத்திர சிகிச்சை விடுதி (படங்கள்)

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பெண்களுக்கான புதிய சத்திரசிகிச்சை விடுதி கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி யோ.திவாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புதிய விடுதியினை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் கிரிதரன் மற்றும் பொதுமருத்துவ நிபுணர் திருமதி நளாயினி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

ஆளணிப் பற்றாக்குறை காரணமாக இதுவரை காலமும் இந்த விடுதி பொது மருத்துவ விடுதியுடன் இணைந்தே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வந்தது.

வடக்கின் மிக முக்கிய வைத்தியசாலையான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இவ்விடுதி திறக்கப்பட்டமையானது நோயாளர்களுக்கும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் மிகுந்த ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

வைத்தியசாலையின் அனைத்து தரப்பு ஊழியர்களினதும் கூட்டு முயற்சியின் காரணமாக உருவான இவ் விடுதியின் தோற்றத்திற்கு வைத்தியசாலையின் தற்காலிக சுகாதார தொண்டர்களின் பணி மகத்தானதாகும்.

இவ்விடுதிக்குத் தேவையான பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன வைத்தியசாலை வளாகதத்தில் கழித்து விடப்பட்டிருந்த பல்வேறு வகையான உலோகங்கள் மற்றும் பலகைகளின் உதவியுடன் வைத்தியசாலையின் பராமரிப்பு பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த தற்காலிக சுகாதாரத் தொண்டர்களினாலேயே புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மிகுதியான சில குறிப்பிட்ட வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் மாத்திரமே யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கம், தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானம் மற்றும் பல சமூக சேவையாளர்களின் தனிப்பட்ட உதவிகள் மூலமாகப் பெறப்பட்டுள்ளன.

பல்வேறு பிரிவுகளுடன் சிறப்பான சேவையாற்றி வரும் இவ்வைத்தியசாலையானது விரைவில் மாகாண பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு, மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிகரான சிறப்பு வைத்தியசாலையாக மிளிர வேண்டுமென்பதே வடக்கு மாகாண மக்கள் அனைவரினதும் ஒருமித்த எதிர்பார்ப்பாகும்.

யாழ்நகர் நிரூபர்-

Tellippalai hospital (1)

Tellippalai hospital (2)

Tellippalai hospital (3)

Tellippalai hospital (4)