செய்திகள்

யாழ்.நீதிமன்றத் தாக்குதலில் கைதான பாடசாலை மாணவரை உறுதிப்படுத்த அதிபர்கள் மறுப்பு.

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் கைதாகிச் சிறைகளிலுள்ள மாணவர்கள் தமது பாடசாலைகளிலேயே கல்வி பயில்கிறார்கள் என்ற உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்க அதிபர்கள் மறுப்புத் தெரிவிப்பதால் கைதான மாணவர்களின் விடுதலை தள்ளிப் போகு மென மாணவர்களின் பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி யாழ்.நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற அச்சத்தில் 130 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களனைவரும் அனுராதபுரம் மற்றும் வவுனியாச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் யாழ்ப்பாணத்தின் பல பிரபலப் பாடசாலைகளின் மாணவர்கள் சிலரும் அடங்குவர்.

இந் நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் அடுத்தமாதம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் அதிபரின் கடிதத்தைப் பெற்றுக் கொள்ள அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மாணவர்களின் பெற்றோர்களைப் பாடசாலையின் அதிபர்கள் அநாகரிகமாக ஏசியதுடன் உறுதிப்படுத்தல் கடிதங்களையும் வழங்க மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக எமது பிள்ளைகளின் விடுதலை தள்ளிப் போவதாகத் தெரிவித்த மாணவர்களின் பெற்றோர்கள் கல்வியும் பாதிக்கப்படுவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.தமது பிள்ளைறகள் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை என்றும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்குச் சென்ற வேளை ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்கவே தமது பிள்ளைகளை மீட்க உரிய தரப்பினர் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.நகர் நிருபர்-