செய்திகள்

யாழ்.நீதிமன்றத் தாக்குதலில் கைதானோரை விடுவிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 34 பேர் பிணையில் விடுதலை

யாழ். நீதிமன்றத் தாக்குதலின் எதிரொலியாக சட்ட விரோதமாகச் சனக் கூட்டத்தைக் கூட்டிக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயற்சித்ததாகச் சாதாரண குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 34 பேர் இன்று திங்கட்கிழமை யாழ்.நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் மாதாந்தம் இறதி ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிமுதல் 12 மணிக்குமிடையில் கையெழுத்திட வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்குத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துக் கடந்த மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வன்;முறையாக மாறியது.இதன் போது யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்டமை மற்றும் யாழ்.நகரப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 130 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் யாழ்.நகரிலுள்ள பொலிஸ் காவலரணை உடைத்தமை,சட்ட விரோதமாகச் சனக் கூட்டத்தைக் கூட்டிக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயற்சித்தமை உட்படப் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 40 பேர் கடந்த 21 ஆம் திகதி யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடையாத காரணத்தால் கடந்த 4 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இதன்படி கடந்த 4 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 6 பாடசாலை மாணவர்களுக்கு நீதிமன்றத்தினால் பிணை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மீதி 34 பேரையும் இன்று 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இந்த வழக்கு இன்றைய தினம் மூன்றாவது தடவையாக விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை,பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-