செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதல் முள்ளிவாய்க்கால் நினைவு வார அனுஷ்டிப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுவாரம் நேற்று முதல் மாணவர்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக கலைப்பீடக் கட்டிடத் தொகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைத்தே மேற்படி நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த இறுதி யுத்தின்போது முள்ளிவாய்க்காலில் வைத்து கொல்லப்பட்டர்களுடைய நினைவு வாரம் நேற்று முதல் உலகெங்கும் மிகவும் உணர்வுப+ர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை காலமும் இவ்வாறான நினைவு தினங்களை அனுஷ்டிக்க முன்னைய அரசாங்கத்தினால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் பொது இடங்களில் இவ்வாறான நினைவு தினம் அனுஷ்டிக்க முற்றாகத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களின் பலத்த கெடுபிடிக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஆண்டு தோறும் மறைமுகமாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்திருந்தனர். இதன்படி நேற்று யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடக் கட்டிடத் தொகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒரு இடத்தில் 2015ஆம் ஆண்டு மே 18 என்று எழுதப்பட்டதும், இரத்தத்தினால் சுடர் ஏற்றப்படுவது போன்றதுமான பதாகை ஒன்று வைக்கப்பட்டு அதற்கு முன்னாள் தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் உயிரிழந்த உறவுகளுக்கு மாணவர்கள் தமது உணர்வு பூர்வமான அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் பல்க்லைக்கழகத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதை அடுத்து புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வருகின்றதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.