செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மூதவைக்கு பிற மாவட்டத்தவர்கள் உள்ளவாங்கப்படவில்லை! கல்வியலாளர்கள் கவலை

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மூதவைக்கு பிற மாவட்டத்தவர்கள் உள்வாங்கப்படாது அனைவரும் யாழ் மாவட்டத்தவர்களை உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த முறை அரசியல் நியமனங்கள் மூலம் மூதவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அதனை ஆட்சேபித்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது புதிய மூதவைக்கு நியமனங்கள் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படவுள்ளவர்களுக்கான பெயர் விபரங்களை பல தரப்பிடமிருந்தும் பெற்றிருந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் உள்ள காரணத்தினால் இம் மாவட்டங்களில் இருந்தும் மூதவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும் என்ற கருத்து காணப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் வவுனியா மற்றும் கிளிநொச்சியில் இருந்து தலா ஒருவருடைய பெயர் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அப் பெயர்கள் நீக்கப்பட்டு யாழ் மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்துபவர்கள் மாத்திரமே நிமிக்கப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகங்கள் வளர்ச்சி அடைவதற்கு இம் மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளை நியமிக்கும் பட்சத்தில் அவ் வளாகங்களுக்கு உறுதுணையாக இச் செயற்பாடு அமையும் எனவும் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மீண்டும் அரசியல் நியமனங்கள் மற்றும் அரசியல் சார்ந்தவர்கள் சிலர் மூதவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர்கள் ஆட்சேபனை வெளியிட்டுள்ளனர்.