செய்திகள்

யாழ். பல்கலை. மாணவன் மீதான வாள்வீச்சு! சூத்திரதாரியான சிப்பாய் கைது

யாழ்ப்பாணம்- சுதுமலை பகுதியல் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி பல்கலைக்கழக மாணவன் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்த படைச் சிப்பாய் நேற்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரால் மறைத்துவைக்கப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த நபரிடமிருந்து பல கொள்ளை மற்றும் வன்செயல்களுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜ்குமார் கபிலராஜ் என்ற குறித்த நபர் முன்னர் காங்கேசன்துறை படைமுகாமில் சிப்பாயாக கடமையாற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மேற்படி நபர் தான் தற்போது படையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல கொள்ளை மற்றும் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை கை துண்டாடப்பட்ட பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 11 சந்தேகநபர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.