செய்திகள்

யாழ். புங்குடுதீவு மாணவி வன்புணர்வு: வலி.தெற்கில் நாளை கடையடைப்பு

யாழ்.புங்குடுதீவில் 18 வயது மாணவி காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டமைக்கு வலி.தெற்கு வர்த்தக சம்மேளனம் தனது வன்மையான கண்டணத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் சகல வியாபார நிலையத்தினரும் வன்புணர்வுக்கு எதிரான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக நாளை புதன்கிழமை (20-05-2015) கடைகளை மூடி பகிஸ்கரிப்பை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு வலி.தெற்கு வர்த்தக சம்மேளனத் தலைவர் லயன் சி.ஹரிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

புங்குடுதீவு கிராமத்தைச் சேர்ந்த வித்தியா என்ற கல்லூரி மாணவி காமவெறிபிடித்த 9 காடையர்களால் பலாத்கார வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு சம்பவம் தமிழர்வாழ் பிரதேசத்தில் நடைபெற்றிருப்பது மிகவும் கேவலமானதும் அசிங்கப்படவேண்டியதுமான ஒரு செயற்பாடாகும். இந்தக் காடையர்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு எமது ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காமக் காமுகர்கள் நீதியின்முன்நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவேண்டியும், இனி எந்தக் காலத்திலும் இவ்வாறானதொரு காமக்கொலைவெறி இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வலி.தெற்கு வர்த்தகர்கள் அனைவரும் கடைகளை மூடி பகிஸ்கரிப்பை மேற்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்குமாறும் நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

எமது ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக மருந்தகங்கள், பெற்றோல் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள், துவிச்சக்கரவண்டி திருத்தும் நிலையங்கள், சந்தை வியாபாரிகள், வெதுப்பகங்கள் மற்றும் அனைத்து சில்லறை வியாபார நிலையங்கள் அனைத்தும் நாளை முழுநேரக் கடையடைப்பை மேற்கொண்டு வியாபார நிலையங்களில் கறுப்புக் கொடிகளைத் தொங்கவிட்டு எமது ஒட்டுமொத்தக் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் எம்முடன் இணைந்து எமது இந்தக் கட்டண எதிர்ப்புக்கு முச்சக்கரவண்டி ஓட்டுநர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், பார ஊர்திகள் உரிமையாளர் சங்கம் ஆகியோரின் ஆதரவையும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

நாளை புதன்கிழமை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தால் யாழ்.நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு மாணவி படுகொலையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது. எமது வர்த்தகர்கள் அனைவரும் இளைஞர் சம்மேளனத்தின் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமது பூரண ஆதரவை நல்கி, ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.

யாழ் நகர் நிரூபர்-