செய்திகள்

யாழ்.மானிப்பாய் சென்.அன்ரனீஸ் தேவாலய பெருநாளை முன்னிட்டு குருதிக்கொடை

 யாழ்.மானிப்பாய் சென்.அன்ரனீஸ் தேவாலய வருடாந்தப் பெருநாளை முன்னிட்டு தேவாலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நடாத்திய இரத்ததான முகாம் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேவாலய முன்றலில் இடம்பெற்றது.

தேவாலய அருட்தந்தை எச்.டபிள்யூ.ஜேம்ஸ் தலைமையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இரத்ததான முகாமில் 14 வரையான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை செய்ததாக வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ம.பிரதீபன் தெரிவித்தார்.ஆலயப் பெருநாளை முன்னிட்டுப் பாதுகாப்புக் கடமையீடுபட்டிருந்த பொலிஸாரொருவரும் தாமாக முன்வந்து குருதிக்கொடை செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி தேவாலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் முதற்தடவையாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.எதிர்காலத்தில் வருடாவருடம் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்படுமென ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ்.நகர் நிருபர்-

image (19)