செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் மக்கள் விசனம்

யாழ்.மாவட்டத்திற்கான புகையிரத சேவை இடம்பெறும் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காணப்படும் நிலையில் இது குறித்து உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையெனப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.யாழில் புகையிரத விபத்துக்களில் சிக்கிப் பலரும் உயிரிழந்த போதிலும் புகையிரதக் கடவைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொக்குவில் நந்தாவில் உடையார் ஒழுங்கைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவை எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் காணப்படுகின்றது.இந்த நிலையில் இந்தப் பகுதி அபாயகரமானதாகவுள்ளது.குறித்த ரயில்வே கடவைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையினால் பல தடவைகள் ரயில்வே திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லையெனவும் பிரதேச சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த வாரம் மேற்படி பகுதியில் முதியவர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.நகர் நிருபர்-