செய்திகள்

யாழ் மாவட்ட எம்.பி.க்களின் தொகையை 9 ஆக பேண வேண்டும்: பாராளுமன்றில் சம்பந்தன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் கவனத்தில் கொண்டு தேர்தல் மறு சீரமைப்பின் போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் 9ஆகப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

20ஆவது திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இடம்பெற்ற யுத்தத்தால் வடக்கில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இடம்பெயர்ந்த பலர் வாக்காளர்களாகப் பதிவுசெய்யாமல் உள்ளனர். சனத்தொகையின் அடிப்படையில் தேர்தல் மறுசீரமைப்புச் செய்தால் அங்கிருந்து தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையும்.

இந்த நிலைமையைக் கருத்தில்கொண்டு தேர்தல் மறுசீரமைப்பின் போது யாழ் தேர்தல் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்பொழுது உள்ளதைப் போன்று 9 ஆகத் தொடர்ந்தும் பேணுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு வரும்வரை குறைந்தது 15, 20 வருடங்களுக்கு யாழ் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக் கூடாது.

அதேநேரம், புதிய தேர்தல் மறுசீர மைப்பானது வடக்கு, கிழக்குத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் சிதறிவாழும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும். தாம் அழிக்கும் வாக்கு அரசியலில் தாக்கம் செலுத்துகிறது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தேர்தல்முறை மாற்றம் அமைய வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இரட்டை வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கமும் எதிர்த்தரப்பும் தமது அரசியல் தேவைகளுக்காக 20ஆவது திருத்தத்தை பயன்படுத்த முயல்கின்றன.

இதனால் காலம் விரயமாகிறது. தங்களுக்குச் சாதகமான தேர்தல் முறையொன்றை கொண்டுவரவே இவர்கள் முயற்சிக் கின்றார்கள். அரசியலமைப்புத் திருத்தத்தின் ஓர் அங்கமாகவே தேர்தல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப் படுகையில் நாட்டைப் பாதிக்கும் சகல பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.