யாழ்.வலிகாமத்தின் பல பிரதேசங்களில் இன்றும் கடும் மழை
யாழ்.வலிகாமத்தின் பல பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமையும் கடும் மழை பொழிந்துள்ளது.பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பித்த மழை வீழ்ச்சி சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
மழை காரணமாகப் பலவிடங்களிலும்,பல வீதிகளிலும் வெள்ளம் தேங்கிக் காணப்பட்டது.மழை காரணமாகப் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.குறிப்பாகப் பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவர்கள் பலரும் நனைந்த வண்ணம் வீடு நோக்கிச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.இன்று காலை தொடக்கம் கடும் வெப்பமான காலநிலை நிலவிய நிலையிலேயே இவ்வாறு திடீர் மழை பொழிந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பகல் வலிகாமத்தில் திடீரென மினி சூறாவளியுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும் யாழ்.குடாநாட்டின் பலவிடங்களிலும் மழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,தற்போது யாழ்.குடாநாட்டின் பலவிடங்களிலும் மப்பும் மந்தாரமுமான காலநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்.நகர் நிருபர்-