செய்திகள்

யாழ் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணி விபரம் யாழ்.மாவட்டச் செயலகத்திடம் இன்று கையளிப்பு

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 570 நிலப்பரப்பு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை (07.04.2015) யாழ்.மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒப்படைக்கப்படும் பகுதிகள் தொடர்பில் ஆராயப்பட்ட பின்னர் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்திற்குள் மக்கள் தமது சொந்த இடங்களில் மீ;ள் குடியேற்றப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வேதநாயகன் தெரிவித்தார்.

வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளுள்ள ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு அறிவித்திருந்தது.

இதன் பிரகாரம் அண்மையில் வளலாய், வசாவிளான் மற்றும் பலாலி தெற்குப் பகுதிகளில் 430 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உறுதிளிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கரில் எஞ்சியுள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு யாழ்.மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த நிலப்பரப்பு நேற்று ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே இன்று அவை ஒப்படைக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டள்ளது.