செய்திகள்

யாழ் வலி.வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிடும் யாழ்.அரச அதிபர் தலைமையிலான குழு

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியின் எஞ்சிய நிலப் பகுதிகளை எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று விடுவிப்பதற்கு ஏற்பாடாக யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் நேரில் சென்று ஆராயவுள்ளதேபாடு குறித்த பிரதேசங்களின் உரிமையாளர்களை இனம் காணும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 6500 ஏக்கர் நிலப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் கடந்த 20 ஆம் திகதிக்கு முன்னதாக விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் சுமார் 400 ஏக்கர் நிலப் பகுதியே கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டிருந்தது.

வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), தையிட்டி தெற்கு(ஜே-250), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 570 ஏக்கர் நிலப் பிரதேசங்களை இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னோடியாக குறித்த பிரதேசங்கள் மிதிவெடி அற்ற பிரதேசம் என எதிர்வரும் 07 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.நகர் நிருபர்-