யுத்த காலத்திற்கு முன்னரிருந்த நிலையை மீண்டும் அடைய நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: சித்தார்த்தன் (படங்கள்)
எங்களுடைய சமுதாயம் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கக் கூடியதோர் சமுகமாக விளங்க வேண்டும். தலை நிமிர்ந்த நிற்க வேண்டும் என நான் கூறுவது உங்கள் உணர்வுகளைத் தூண்டுவதற்காக அல்ல.
நாம் தற்போதுள்ள நிலையிலிருந்து மீண்டு மீண்டும் முன்மாதிரியான சமுதாயமாக எங்களை நாங்களே உருவாக்கிக் கொள்வது எப்படி? என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
சிறந்ததோர் சமுதாயமாக,பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டியது எங்களின் கடமை. யுத்த காலத்திற்கு முன்னரிருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.
யாழ்.தேசியக் கல்வியியற் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை (02.04.2015) பிற்பகல் 02 மணி முதல் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் கல்லூரியின் வீரசங்கிலியன் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய சமுதாயம் தற்போது எல்லா வகையிலுமே பின்னடைவானதோர் நிலையில் காணப்படுகின்றது.கல்வி,பொருளாதாரம்,சமுதாய ஒழுக்கம் முதலான பல்வேறு விடயங்களில் நாம் தற்போது பின்னடைவை எதிர்நோக்கியுள்ளோம்.
எமது மாணவ சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எமது ஆசிரியர்கள் முழுமையான அர்ப்பணிப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் ஆசிரிய பயிற்சி பெறும் மாணவர்கள் ஒழுக்கம், பணிவு, அறிவு, ஏனைய திறமைகள் என அனைத்திலுமே சிறந்து விளங்குகின்றனர். இங்கே அவர்கள் நன்றாகப் பயிற்றப்படுகின்றனர்.
ஆகவே,இந்தக் கல்லூரியில் பயிற்றப்படும் ஆசிரிய மாணவர்கள் பாடசாலைகளுக்குக் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது ஒழுக்கமுள்ள, கல்வியறிவுள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு வித்திட முடியும். அவ்வாறானதோர் பணியை ஆற்ற வேண்டும். ஆற்றுவீர்கள் என நம்புகின்றேன் என்றார்.
குறித்த விளையாட்டு நிகழ்வின் இடைவேளை நிகழ்வின் போது கல்லூரியில் கல்வி பயிலும் முகிழ்நிலை ஆசிரியர்களால் பல்வேறு வியப்பிலாழ்த்தும் சாகச நிகழ்வுகள் நிகழ்த்திக் காட்டப்பட்டன.
அவற்றுள் பிரமிட் வடிவிலான கோபுரம் அமைத்தல், நெருப்பு வளையத்துக்குள்ளால் ஒரே தடவையில் இருவர் பாய்ந்து நிகழ்த்திய சாகசம் என்பன பார்வையாளர்கள் மத்தியில் த்ரில் ஊட்டுவனவாக அமைந்திருந்தன.
இந்தச் சாகச நிகழ்வுகளைக் கண்டு அங்கு கூடியிருந்தோர் உள்ளம் பூரிப்படைந்து கைதட்டி ஆரவாரித்து வரவேற்றனர்.
அத்துடன் அஞ்சலோட்டம், கயிறிழுத்தல் உட்படப் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் கண்களுக்கு விருந்தளித்தன.
விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பீடாதிபதி மற்றும் விருந்தினர்கள் கேடயங்கள் மற்றும் பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததுடன், பதக்கங்கள் அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.
யாழ்.நகர் நிருபர்-