செய்திகள்

யு சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய் படம்

வழக்கமாக பேய், பிசாசு, ஆவி சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் பயமுறுத்தும் திகில் படங்கள் என்றுதான் கருதப்படும். அண்மைக் காலமாக இப்படிப்பட்ட படங்கள் நகைச்சுவை கலந்து வரும்போது ரசிக்கப்படுகின்றன. ‘அரண்மனை’, ‘பிசாசு’, ‘டார்லிங்’ படங்களின் வெற்றிக்கு பின்னர் குடும்பத்தினர் விரும்பி ரசிக்கும் நட்சத்திரங்களாக பேய்களும் ஆவிகளும் மாறிவருகின்றன.

இந்த வரிசையில் ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘ஓம் சாந்தி ஓம்’ படமும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். இதில் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

சமீபகாலமாக கொடூர வில்லனில் இருந்து காமெடியில் கலக்கும் ‘நான் கடவுள் ‘ராஜேந்திரன், இப்படத்தில் வவ்வால் பாண்டியாக முழுநீள நகைச்சுவை பாத்திரத்தில் கலகலப்பூட்டி கலக்குகிறார். இப்படத்தை இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராஜேஷ் ஆகியோரிடம் பணிபுரிந்து சூர்ய பிரபாகர் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் எபிநேசர் இசையமைத்துள்ளார். படத்தை 8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ளார்.

முழுக்க முழுக்க திகில், நகைச்சுவை கலந்த படமாக உருவாகியிருக்கும் இப்படம் குழந்தைகள் முதல் பெயரிவர்கள்வரை அனைவரும் கவரும்படியாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், வழக்கமாக திகில் படங்களுக்கு தணிக்கை துறையினர் யுஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். ஆனால், இப்படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ள தணிக்கை துறையினர், குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக எடுத்ததற்கு படக்குழுவினருக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.