செய்திகள்

ஜுனிற்கு முன்னர் உள்நாட்டு விசாரணை பொறிமுறை விபரங்கள் வெளியாகும்: டைம்சிற்கு மைத்திரி பேட்டி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யூன் அல்லது யூலை மாதத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற விதத்தில் மேமாதத்தில் பாராளுமன்றத்தை கலைக்கவுள்ளதாகவும், அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகள் எவ்வாறுமுன்னெடுக்கப்படும் என்பது பற்றிய விபரங்களை யூன் இறுதிக்குள் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டைம்ஸ் சஞ்சிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளதாவது  (தமிழில் – சமகளம் நிருபர் )

பிரிட்டனிற்கு மார்ச் மாதம் விஜயம் மேற்கொண்ட வேளை இன்னமும் ஒரு மாதத்திற்குள் விசாரணைகள் குறித்து அறிவிக்கப்போவதாக தெரிவித்திருந்த மைத்திரிபாலசிறிசேன எனினும் டைம்சிற்கு கருத்து தெரிவிக்கையில் யூன் மாத முடிவிற்குள் உள்நாட்டு விசாரணைபொறிமுறை குறித்த விபரங்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்காக மிகவும் வலுவான உள்ளக பொறிமுறையொன்றை அமைப்போம் என ஐக்கிய நாடுகளுக்கு தெரிவித்துள்ளோம்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஊடாக நாங்கள் ஆலோசனையை கோரியுள்ளோம் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
OB-NQ436_srilan_G_20110426000641
ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடித்த மைத்திரிபால சிறிசேன, அளவுக்கதிகமான அதிகாரங்கள் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பலவீனப்படுததுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளமை நாட்டிற்கு பாரிய பிரச்சினை ,அதனை பகிர்ந்தளிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதியானதன் காரணமாக நாட்டின் வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.சீனாவிலிருந்து விலகி இந்தியாவை இலங்கை அரவணைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. எனினும் இலங்கை முற்றுமுழுதாக அணிசேரா கொள்கையை கடைப்பிடிக்கின்றது என சிறிசேன தெரிவித்தார்.

யாருடனும் நாங்கள் பகைமை பாராட்டவில்லை, அனைத்து நாடுகளையும் நோக்கி நாங்கள் நேசக்கரங்களை நீட்டுகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது குறித்து சிந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனை முதலில் முன்னைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தது. முன்னைய ஜனாதிபதி இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான,விசாரணைகளை மேற்கொள்ளாததற்காக சர்வதேச அழுத்தங்களை சந்தித்தார்.நாங்கள் இது குறித்து தென்னாபிரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்,இம்முறை அவை சாதகமானவையாக காணப்படுகின்றன, என ஜனவரி 8 திகதி பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு குறித்த யோசனையை செப்டம்பர்மாதம் நடைபெறவுள்ள அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் பகிர்ந்துகொள்ளப்போவதாக ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உள்நாட்டு பொறிமுறை குறித்த யோசனைகளும் ஆராயப்படுகின்றன. இதேவேளை இலங்கையின் வெளிவிவகார கொள்கை குறித்த சிறிசேனவின் கருத்தை வலியுறுத்திய பிரதமர் ரணில்விக்கிரசிங்க இந்தியாவுடனும், மேற்குலக நாடுகளுடனும் நட்புறவை பேணுவதற்கு புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை, சீனாவிடமிருந்து விலகி செல்வதாக கருத முடியாது, கடந்த காலங்களில் நாங்கள் அனைவரிடமிருந்தும் விலகிச்சென்றோம்,சீனாவை மாத்திரம் விட்டுவிட்டு,நாங்கள் மேற்குலகை பகைத்துக்கொண்டோம்,இந்தியாவை பகைத்துக்கொண்டோம்,அப்படி தொடரமுடியாது, இலங்கைக்கு மேற்குலகும், சீனாவும், இந்தியாவும் அவசியம் என குறிப்பிட்டார் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.