செய்திகள்

யேமன் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆயுத உதவி

யேமனில் ஹெளத்தி போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சவுதிஅரேபியா தலைமையிலான நாடுகளுக்கு ஆயுதவிநியோகத்தினை துரிதப்படுத்தியுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
யேமனை வன்முறையை பயன்படுத்தி கைப்பற்றமுடியாது என்ற வலுவான செய்தியை சவுதிஅரேபியாவும் அதனுடன் இணைந்துள்ள நாடுகளும் தெரிவித்து வருவதாக அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதரவு வழங்கும் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்குவதை துரிதப்படுத்தியுள்ளது, புலனாய்வு தகவல்களை வழங்கும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம்,சவுதிஅரேபியாவில் ஹெளத்தி அமைப்பினரிற்கு எதிரான நடவடிக்கைக்காக விசேட கட்டுப்பாட்டறையொன்றை சவுதிஅரேபியாவில் ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹெளத்தி இயக்கத்தின் செயற்பாடுகளால் முன்னர் வளமான திசையில் சென்றுகொண்டிருந்த யேமனின் பொருளாதாரம் பாரிய அழிவை சந்தித்துள்ளது,இந்த ஸ்திரமின்மையை அல்ஹைடாவும் ஏனைய அமைப்புகளும் பயன்படுத்த முனைகின்றன,
தற்போது உருவாகியுள்ள ஆபத்து யேமனிற்கு மாத்திரம் என குறிப்பிடமுடியாது இது முழு உலகிற்குமான ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலக்குகளை துல்லியமாக தாக்க கூடிய விமானக்குண்டுகளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அனுப்புவதாகவும், அவற்றை அந்த நாடு தனது சகாக்களுக்கு அனுப்புவதாகவும் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.