செய்திகள்

ரகசியத் திருமணமா? நயன்தாரா விளக்கம்

பிரபல நடிகை நயன்தாரா, நானும் ரெளடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இதில் ஆச்சரியமே, நயன்தாரா முன்வந்து பதிலளித்திருப்பதுதான்.

காதல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போதும் நயன்தாரா பதிலளிக்க விரும்பமாட்டார். அதிலும் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடர்பான காதல் செய்திகள் வெளிவந்த நாள் முதல் அமைதி காத்த நயன்தாரா, இப்போது ரகசியம் திருமணம் தொடர்பான செய்திக்கு உடனே பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அளித்த ஒரு பேட்டியில், ‘திருமண வதந்தியா? கண்டிப்பாக இது உண்மை இல்லை. படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறேன். அதுதான் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது. ஆதாரமில்லாத செய்தியைப் பரப்பும் ஊடகங்கள் கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ளலாம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது பெரிய விஷயம். அது நடக்கும்போது நிச்சயம் உலகத்துக்கு அறிவிப்பேன். அவசர அவசரமாக என் திருமணம் ஒருபோதும் நடக்காது’ என்று கூறினார் நயன்தாரா. விக்னேஷ் சிவனும் ட்விட்டரில் விளக்கம் அளித்தார்.

நயன்தாராவின் இந்த விளக்கம் மேலும் வதந்திகளை அதிகமாக்கும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. வதந்தியை அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தாலே அது தானாக வடிந்து போயிருக்கும். அதற்குப் பதிலாக மெனக்கெட்டு பதிலளித்திருப்பது ஏன், மீண்டும் மீண்டும் அதுபோன்ற செய்திகள் வெளிவர வழிவகுக்கும் என்றும் நயன்தாராவின் விளக்கத்தின் மீது கேள்விகள் எழுகின்றன.

ஆனால், நயன்தாராவின் ரகசிய திருமணச் செய்தி ஊடகங்களில் இன்று வெளியானவுடன் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு கிளம்பியது. பலரும் இதைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள். நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் நண்பர்கள், திரையுலகினர் தரப்பிலிருந்து ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனால் தொடரும் வதந்திகளால் ரசிகர்களின் கற்பனைகள் சிறகடித்துப் பறக்கும் என்று எண்ணியே நயன்தாரா பேட்டியளிக்க முன்வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இருவருடைய பதிலிலும் திருமணச் செய்தி மறுக்கப்பட்டதே தவிர காதல் பற்றி ஒரு வார்த்தை இல்லை. காதலை மறுத்து இருவரும் எதுவும் சொல்லாததால் சென்ற வாரம் வெளியான கிசுகிசு உண்மை என்றே தெரியவருகிறது. நயன்தாரா சொன்னதுபோல ஊரைக்கூட்டி அறிவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.