செய்திகள்

ரஜினிக்கு வில்லன் ஷாருக்கான்?

’லிங்கா’ படத்தின் பிரச்னை ஒரு வழியாக ஓய்ந்து போகவே அடுத்தடுத்து இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவிருக்கிறார். அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரு படங்களைக் குறித்தும் தினம் தினம் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. அந்த வகையில் ரஞ்சித் இயக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் கசிந்தது.

அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படம் முழுக்க முழுக்க மலேசியாவை பின்னணியாகக் கொண்ட கேங்ஸ்டர் படமெனவும் அதற்கான லோகேஷன் தேர்வில் ரஞ்சித் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படம் 300 கோடி பட்ஜெட் எனவும், படத்தில் இன்னொரு நாயகனாக விக்ரம் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது விக்ரம் கேரக்டரில் நடிக்க ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இதே கேரக்டரில் நடிக்க அமீர்கானிடமும் பேச்சுவார்த்தை நடந்தது என்ற செய்திகள் வெளியானது வேறு கதை.

ஷாருக்கான் ஒருவேளை ஒப்பந்தம் ஆனால் தமிழில் ரஜினி ஹீரோவாகவும், ஷாருக் வில்லனாகவும், இந்தியில் ரஜினி வில்லனாகவும், ஷாருக்கான் ஹீரோவாகவும் நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஞ்சித் படம் பொங்கலுக்கும், ஷங்கர் படம் 2017ம் ஆண்டும் வரலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.